மத்திய அரசு கோதுமை குறைந்தபட்ச ஆதார விலையை குவின்டாலுக்கு ரூ.20 அதிகரித்து இருப்பது கேலிக்குறியது என்று பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் கூறியுள்ளார்.
மத்திய அமைச்சரவை நேற்று ரபி பருவத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் கோதுமை விலையை குவின்டாலுக்கு ரூ.20 உயர்த்தியது. தற்போது குவின்டாலுக்கு ரூ.1,080 வழங்கப்பட்டு வருகிறது. இதை ரூ.1,100 ஆக உயர்த்துவதாக அறிவித்தது.
இது குறித்து பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் கருத்து தெரிவிக்கையில், இந்த உயர்வு நியாயமற்றது என்பதுடன் உற்பத்தி செலவுக்கு ஈடுகட்டாது. உரம், பூச்சி மருந்து, டீசல் போன்ற விவாசாய இடு பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், விளை பொருட்களுக்கு குறைந்த விலை கிடைப்பதால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு அதிகரித்துள்ள இருபது ரூபாய், விவசாயிகளின் கஷ்டங்களை தீர்க்க எவ்வித தீர்வாகவும் அமையாது. விவசாயிகள் துன்பத்தை தாங்க முடியாமல் தற்கோலை செய்து கொள்வதை மத்திய அரசு உணர வேண்டும்.
விவசாயிகளுக்கு கட்டுப்படியாகாத விலை நிர்ணயிக்கும் மத்திய அரசின் கொள்கையே, விவசாய துறை வளர்ச்சி குறைவதற்கு காரணம் என்று அறிக்கையில் பிரகாஷ் சிங் பாதல் கூறியுள்ளார்.