அஸ்ஸாம் மாநில அரசு வாட் வரி விகிதத்தை அதிகப்படுத்தி உள்ளது தொழில்-வர்த்தக துறையினர் மத்தியிலும், எதிர்க்கட்சிகளிடமும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
அஸ்ஸாம் மாநில அரசு ஊழியர்களுக்கு புதிய ஊதிய விகிதம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது இதனால் அரசின் செலவினம் அதிகரித்துள்ளது. இதனை ஈடுகட்டும் வகையில் அஸ்ஸாம் அரசு மதிப்பு கூட்டு வரி எனப்படும் வாட் வரியை அதிகரித்துள்ளது.
ஊதிய கமிஷன் பரிந்துரைத்த புதிய சம்பளம் ஜனவரி மாதம் முதல் அமல்படுத்த உள்ளது. இதனால் மாநில அரசுக்கு ரூ.4,400 கோடி வரை தேவைப்படும்.
இந்த செலவை ஈடுகட்ட மாநில அரசு வாட் வரி சட்டத்தின் படி 1 விழுக்காடு அதிகரித்துள்ளது. தற்போது 4 விழுக்காடு, 12.5 விழுக்காடு வாட் வரி விதிக்கப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 1 விழுக்காடு விதிக்கப்படும்.
இதன்படி சைக்கிள், அலுமினிய பாத்திரங்கள், மூங்கிலினால் தயாரித்த பொருட்கள், மருந்து, தையல் இயந்திரம் உட்பட 4 விழுக்காடு வாட் வரி, இனி 5 விழுக்காடாக அதிகரிக்கும்.
இந்த வரி உயர்வு மூலம் ரூ.130 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வரி உயர்வு பற்றி வடகிழக்கு பிராந்திய தொழில்-வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், இந்த நடவடிக்கை எதிர் விளைவுகளையே உருவாக்கும். மாநில அரசு அக்டோபர் 31 ஆம் தேதி வாட் வரியை உயர்த்த வெளியிட்டுள்ள அறிவிக்கை அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது.
பொருளாதார நெருக்கடி எல்லா தரப்பையும் பாதித்துள்ள வேளையில், பல்வேறு நாட்டு அரசுகள் நெருக்கடியை தீர்க்க முயற்சி எடுக்கும் போது, மாநில அரசின் நடவடிக்கை தேவையற்றது, எதிர்பாரதது, பொருளாதாரத்தின் எல்லா விதிகளுக்கும் எதிரானது என்று கண்டனம் தெரிவித்துள்ளது.