கரிப் பருவத்தில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி 136.5 லட்சம் டன்னாக இருக்கும். இது சென்ற கரிப் பருவத்துடன் ஒப்பிடுகையில் 10 விழுக்காடு குறைவு என்று சமையல் எண்ணெய் உற்பத்தி-விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த சங்கத்தின் 47 வது ஆண்டு விழா நேற்று இந்தூரில் நடைபெற்றது. அப்போது எண்ணெய் வித்து உற்பத்தி குறையும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த கரிப் பருவத்தில் எள் தவிர மற்ற எல்லா எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி குறையும். இதில் சிலவற்றின் உற்பத்தி அதிகரிக்காமல், சென்ற வருடத்தில் இருந்த அளவிலேயே இருக்கும்.
சென்ற கரிப் பருவத்தில் 150.3 லட்சம் டன் எண்ணெய் வித்து உற்பத்தியானது.
மத்திய விவசாய அமைச்சகம் எண்ணெய் வித்து சாகுபடி செய்துள்ள பரப்பு பற்றிய புள்ளி விபரங்களை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் எண்ணெய் வித்து உற்பத்தி மதிப்பிடப்பட்டுள்ளது.
நிலக்கடலை உற்பத்தி இரண்டாவது வருடமாக தொடர்ந்து குறையும். இந்த கரிப் பருவத்தில் 32.9 லட்சம் டன் மட்டுமே உற்பத்தியாகும். சென்ற கரிப் பருவத்தில் 42.2 லட்சம் டன் உற்பத்தியானது. இந்த வருடம் நிலக்கடலை சாகுபடி பரப்பளவு சுமார் ஒன்பது லட்சம் ஹெக்டேர் குறைந்துள்ளது. ஹெக்டேருக்கு சென்ற வருடத்தை விட நிலக்கடலை உற்பத்தி குறைவாக இருக்கும். இந்த வருடம் ஹெக்டேருக்கு சராசரியாக 741 கிலோ நிலக்கடலை உற்பத்தியாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ( சென்ற வருடம் ஹெக்டேருக்கு 791 கிலோ).
இதே போல் சோயா சாகுபடி செய்யும் பரப்பளவும் குறைந்துள்ளதால், இதன் உற்பத்தி 85 லட்சம் டன்னாக குறையும். ( சென்ற வருடம் 89 லட்சம் டன்). இதன் உற்பத்தியும் ஹெக்டேருக்கு 884 கிலோவாக குறையும். ( சென்ற வருடம் ஹெக்டேருக்கு 924 கிலோ).
இந்த கரிப் பருவத்தில் எண்ணெய் வித்துக்களில் எள் உற்பத்தி மட்டுமே அதிகரிக்கும். எள் சாகுபடி செய்யும் பரப்பளவு 1 லட்சத்து 50 ஆயிரம் ஹெக்டேர் அதிகரித்துள்ளது. இதே போல் ஹெக்டேருக்கு உற்பத்தியும் 241 கிலோவாக அதிகரிக்கும். ( சென்ற வருடம் ஹெக்டேருக்கு 193 கிலோ).