புது டெல்லி:, திங்கள், 2 நவம்பர் 2009( 14:59 IST )
ஹூன்டாய் நிறுவனத்தின் கார் விற்பனை அக்டோபர் மாதத்தில் 41.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்த வருடம் அக்டோபரில் 28,301 கார்கள் விற்பனையாகி உள்ளன.
இது சென்ற வருடம் அக்டோபருடன் ஒப்பிடுகையில் 41.4 விழுக்காடு அதிகம். சென்ற அக்டோபரில் 20,009 கார்கள் மட்டுமே விற்பனை ஆனது.
அதே நேரத்தில் அயல்நாடுகளின் ஏற்றுமதி 11.9 விழுக்காடு குறைந்துள்ளது. இந்த அக்டோபரில் 23,435 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ( சென்ற அக்டோபர் ஏற்றுமதி 26,587).
இது குறித்து விற்பனை பிரிவு மூத்த துணை தலைவர் அர்விந்த் சாக்சனா கூறும் போது, கடந்த இரண்டு மாதங்கள் பண்டிகை காலமாக இருந்ததால் கார் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக இருந்த நிலை மாறியது. தற்போது விற்பனை அதிகரிக்க துவங்கியுள்ளதால், வாகன விற்பனை இரண்டு இலக்க வளர்ச்சியை எட்டும். இந்திய வாகன உற்பத்தி துறை மீண்டும் வளர்ச்சி பாதையை நோக்கி திரும்பியுள்ளது.
இந்த நிறுவனத்தின் உள்ளூர் விற்பனை, ஏற்றுமதி இரண்டும் சேர்த்து அக்டோபரில் 51,736 கார்கள் விற்பனை ஆகி உள்ளது. இது சென்ற அக்டோபருடன் ஒப்பிடும் போது 11 விழுக்காடு வளர்ச்சி ( சென்ற அக்டோபரில் உள்நாட்டு விற்பனை, ஏற்றுமதி சேர்த்து 46,596).