மம்தா பானர்ஜியின் ரயில்வே பட்ஜெட்டிற்கு தொழில் துறை பாராட்டு தெரிவித்துள்ளது. இந்த பட்ஜெட் வளர்ச்சிக்கானது, தொழில் துறைக்கு சாதகமானது என்று பாராட்டியுள்ளன.
மக்களவையில் நேற்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, 2009-10 ஆம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதன் அம்சங்களுக்கு பாராட்டு தெரிவித்த இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைமை இயக்குநர் சந்திரஜுட் பானர்ஜி கருத்து தெரிவிக்கையில், ரயில் பயணிகளின் பாதுகாப்பு அம்சங்களை விட்டுக் கொடுக்காமல், ஒட்டு மொத்த வளர்ச்சியை அடிப்படையாக கொண்டும், தொழில் நுட்பத்தை கடைபிடிக்கும் வகையிலும், வர்த்தக நோக்கத்துடன் இயங்கும் வகையில் உள்ளது.
புதிய வேகன்களை வாங்குவது, உள்கட்டமைப்புகளை விரிவாக்கம் திட்டங்களால் தொழில் துறைக்கு வாய்ப்பளிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளார்.
பயணிகள் கட்டணம், சரக்கு போக்குவரத்து கட்டணம், ரயில்வே இருப்பு பாதையில் ஆப்டிக் பைபர் கேபிள்கள் அமைப்பது, புதிதாக அதி வேக ரயில்களின் அறிமுகம் ஆகியவைகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.
மத்திய அரசுடன் இணக்கமாக உள்ள இந்திய தொழில் கூட்டமைப்பு, அரசின் அறிவிப்புகளில் சில பாதகமாக இருந்தாலும் கூட, எப்போதும் பாராட்ட தவறுவதில்லை. இதே போல் ரயில்வே பட்ஜெட்டையும் பாராட்டியுள்ளது.
இந்த பட்ஜெட் வரவுக்கும்- செலவுக்கும் இடையே பற்றாக்குறையான பட்ஜெட்டாக இருந்தாலும் கூட, வருவாயை அதிகரிப்பதற்கு பயணிகள், சரக்கு கட்டணம் உயர்த்தபடவில்லை. பயணிகளுக்கும், ஏழைகளுக்கும் அனுசரனையான பட்ஜெட்டாகவே உள்ளது. பெரிய அளவில் தொழில் துறைக்கு பயன்படும் படியான அறிவிப்புகள் இல்லை. இருப்பினும் வழக்கம் போல் இந்திய தொழில் கூட்டமைப்பு பாராட்டியுள்ளது.
அதே நேரத்தில் பி.ஹெச்.டி சேம்பர் ஆப் காமர்ஸ் என்று அழைக்கப்படும் பஞ்சாப் ஹரியான டெல்லி வர்த்தக சங்கம், மம்தா பானக்ஜியின் ரயில்வே பட்ஜெட்டை குறை கூறியுள்ளது.
இதன் தலைவர் சதீஷ் பர்கோடியா கருத்து தெரிவிக்கையில், பொருளாதார மந்தநிலை உள்ள நிலையில், எல்லா பிரிவுகளும் பயன் பெறும் வகையில் சரக்கு போக்குவரத்து கட்டணத்தை குறைத்திருக்க வேண்டும். மற்ற நாடுகளை விட, இந்தியாவில் சரக்கு போக்குவரத்து கட்டணம் அதிகமாக உள்ளது. இதன் வருவாயில் இருந்து பயணிகள் கட்டணத்திற்கு மானியம் வழங்கப்படுகிறது.
ரயில்வேயின் போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில், புதிய இருப்பு பாதை போடுவது உள்ளிட்ட அறிவிப்புகள் இல்லை. இதே போல் சரக்கு முனையங்களின் வசதிகளை மேம்படுத்துதல், சரக்கு போக்குவரத்து வேகன்களை நவீன படுத்துதல், மிக முக்கியமாக சரக்கு ரயில்கள் வேகமாகவும், அதே நேரத்தில் பாதுகாப்பை அதிகரிப்பதற்கான எவ்வித அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை என்று கூறியுள்ளார். |