முதன்மை பக்கம் > செய்திகள் > வ‌ணிக‌ம் > செய்திகள் > பணப்புழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பணப்புழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை
மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மக்களவையில் நேற்று தாக்கல் செய்த 2008-09 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில், இந்த ஆண்டில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதில் மத்திய அரசின் ரொக்க கையிருப்பு, முதலீடுகள், இந்திய ரிசர்வ் வங்கியின் அன்னியச் செலாவணி செயல்பாடு ஆகியவற்றில் இருந்த வேறுபாடு முக்கிய காரணிகளாக அமைந்திருந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2008-09 ஆம் நிதியாண்டில் ரொக்க கையிருப்பு விகிதம் சந்தை நிலைப்படுத்தும் திட்டம் மற்றும் பணப்புழக்க சமன்படுத்தும் வசதி உள்ளிட்ட வெளிப்படையான செயல்பாடுகள் மூலம் பணப்புழக்கத்தை நிர்வகிக்கும் கொள்கையை இந்திய ரிசர்வ் வங்கி செயல்படுத்தி வந்துள்ளது.

இதன் காரணமாக நிதி மற்றும் பணப்புழக்க நிர்வாக செயல்பாடுகள் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் உலகளாவிய நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் முன்னேற்றத்தை காண தொடங்கியது.

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்தது. இதனால் அன்னியச் செலாவணி சந்தையில் ஏற்பட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், பொதுத் துறை நிறுவனங்கள் உள்நாட்டு பணப்புழக்கத்தை பயன்படுத்திக் கொள்ள வழி செய்யும் வகையில் ரிசர்வ் வங்கி 2008 ஜுன் முதல் வாரம் தொடங்கி ஆகஸ்ட் முதல் வாரம் வரையில் சிறப்பு சந்தைச் செயல்பாடுகளை மேற்கொண்டதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சிறப்புச் சந்தை செயல்பாடுகள் இயல்பான பணப்புழக்கத்திற்கு வகை செய்தன.

பணப்புழக்கத்தை மேலும் வலிமையான முறையில் நிர்வகிக்கவும், அரசின் சந்தை கடன் திட்டத்தை எவ்வித இடையூறுமின்றி செயல்படுத்துவதை உறுதி செய்யவும் இந்த சிறப்பு சந்தை நிர்வாகம் 2009 பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் விரிவுபடுத்தப்பட்டது. மத்திய அரசின் கடன் பத்திரங்களை பேரத்தின் அடிப்படையில் மட்டுமின்றி, ஏல அடிப்படையில் வாங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் இவற்றில் அடங்கும்.

உள்நாட்டு பணப்புழக்கத்தை மேலும் விரிவுபடுத்துவதற்காக ரொக்க கையிருப்பு விகிதம் 2009 ஜனவரி 17 ஆம் தேதி முதல் 9 விழுக்காட்டில் இருந்து, 400 புள்ளிகள் குறைக்கப்பட்டதாக பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சட்டப்பூர்வமான பணப்புழக்க விகிதம் 25 விழுக்காட்டில் இருந்து, 100 புள்ளிகள் குறைக்கப்பட்டு 2008 நவம்பர் 8 ஆம் தேதி முதல் 24 விழுக்காடாக குறைக்கப்பட்டது. பரஸ்பர நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் சந்தித்த பணப்புழக்க பிரச்னைக்கு வங்கிகள் தீர்வு காண உதவும் வகையில் ரூ.60 ஆயிரம் கோடி அளவிற்கு குறிப்பிட்ட கால ரெப்போ வசதி அறிமுகம் செய்யப்பட்டது.

வேளாண் கடன் தள்ளுபடி மற்றும் கடன் நிவாரண திட்டங்களுக்காக நிதி நிறுவனங்களுக்கு ரூ.25 ஆயிரம் கோடி முன்பணமாக வழங்கப்பட்டது. வீட்டு வசதித் துறைக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தேசிய வீட்டு வசதி வங்கிக்கு ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்திய ஏற்றுமதி நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில் எக்சிம் வங்கிக்கு மறு நிதி வசதி அளிக்கப்பட்டதாகவும் பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
பரஸ்பர நிதி திட்டங்களில் முன்னேற்றம்: முதலீட்டு சந்தையில் வளர்ச்சிக்கான அறிகுறி
இலாபத்தில் ரயில்வே பொதுத்துறை நிறுவனங்கள்
தொழில்துறை வளர்ச்சி 2.4 விழுக்காடு
புதிய பள்ளிகள் திறக்கப்படும்
உணவு தானிய உற்பத்தி 229.85 மில்லியன் டன்-பொருளாதார ஆய்வறிக்கை
பங்கு ஈவு வரி நீக்கம்-ஆய்வறிக்கை