முதன்மை பக்கம் > செய்திகள் > வ‌ணிக‌ம் > செய்திகள் > பரஸ்பர நிதி திட்டங்களில் முன்னேற்றம்: முதலீட்டு சந்தையில் வளர்ச்சிக்கான அறிகுறி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பரஸ்பர நிதி திட்டங்களில் முன்னேற்றம்: முதலீட்டு சந்தையில் வளர்ச்சிக்கான அறிகுறி
2008 ஆம் ஆண்டில் பரஸ்பர நிதி துறையில் இருந்த பின்னடைவு மாறி, அத்துறையில் முன்னேற்றம் காணப்படுவதாக 2008-09 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்குச் சந்தையில் பரஸ்பர நிதி நிறுவனங்களின் ( மியூச்சுவல் பண்ட்) முதலீடு 2009 மார்ச்சில் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் ரூ.2320 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இதே காலகட்டத்தில் கடன் பத்திரங்களில் ரூ.36,791 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. 2007-08 ஆம் ஆண்டில் மொத்த நிதி சேமிப்பில் 7.7 விழுக்காடு மட்டுமே பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதால் பரஸ்பர நிதித்துறை வளர்ச்சி காண்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இதில் தற்போது 15 விழுக்காடாக உள்ள சிறு முதலீட்டாளர்களின் பங்கேற்பு வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என்றும், பல்வேறு புதிய முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கான கல்வி போன்ற நடவடிக்கைகளை பரஸ்பர நிதித் துறை மேற்கொண்டிருப்பதாலும் வெளிப்படையான வர்த்தக நிர்வாக நடவடிக்கைகள் காரணமாக முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை அதிகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நேற்று மக்களவையில் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரஸ்பர நிதி நிறுவனங்களின் நிர்வாகத்தில் உள்ள சொத்துக்களின் மதிப்பு 2007 ஆம் ஆண்டின் இறுதியில் ரூ.5,49,936 கோடியாக இருந்தது. இது 2008 ஆம் ஆண்டின் இறுதியில் ரூ.4,13,365 கோடியாக குறைந்துவிட்டது.

வளர்ச்சியை மையமாகக் கொண்ட திட்டங்களிலிருந்து வருவாயை மையமாகக் கொண்ட திட்டங்களுக்கு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. வருவாயை அடிப்படையாகக் கொண்ட திட்டங்களில் நிர்வகிக்கப்படும் சொத்துக்களின் மதிப்பு 2008 ஆம் ஆண்டில் முந்தைய ஆண்டின் அளவிலேயே இருந்தது. ஒட்டுமொத்த சொத்துக்களின் மதிப்பில், இதன் பங்கு 47.7 விழுக்காடாக உள்ளது.

பல்வேறு நிதித் திட்டங்களின் கீழ் நிர்வகிக்கப்படும் சொத்துக்களின் அளவில் இறக்கம் காணப்பட்டது. கில்ட் மற்றும் கோல்ட் இடிஃஎப் திட்டங்களில் மட்டும் 2008 ஆம் ஆண்டில் அதிக அளவு சொத்துக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

முதலீட்டு சந்தையின் செயல்பாடு திருப்தியளிக்கும் வகையில் உள்ளது என்றும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களிடையே ஆர்வமும் நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது என்றும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2009 ஏப்ரல், மே மாதத்தில் அன்னிய முதலீட்டு நிறுவனங்களின் நிகர முதலீடு 5.4 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. முதன்மை சந்தை, இரண்டாவது சந்தை, பரஸ்பர நிதி, அன்னிய நிறுவன முதலீடுகள், வர்த்தக கடன் சந்தை போன்றவற்றில் 2008-09 ஆம் ஆண்டில் அரசு மேற்கொண்ட பல்வேறு கொள்கை அடிப்படையிலான முயற்சிகளின் விளைவாக வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
இலாபத்தில் ரயில்வே பொதுத்துறை நிறுவனங்கள்
தொழில்துறை வளர்ச்சி 2.4 விழுக்காடு
புதிய பள்ளிகள் திறக்கப்படும்
உணவு தானிய உற்பத்தி 229.85 மில்லியன் டன்-பொருளாதார ஆய்வறிக்கை
பங்கு ஈவு வரி நீக்கம்-ஆய்வறிக்கை
மருந்து விலை கட்டுப்பாடு நீக்க வேண்டும்-பொருளாதார ஆய்வறிக்கை