மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் வெளியிடும் யூனிட்டுகளில் முதலீடு செய்பவர்களிடம் இருந்து ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் நுழைவு கட்டணம் வசூலிக்க கூடாது என்று செபி கூறியுள்ளது.
மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள், யூனிட்டுகளில் முதலீடு செய்யும் தொகையில் இருந்து குறிப்பிட்ட தொகை நுழைவுக் கட்டணமாக கழிக்கின்றன. மீதம் உள்ள தொகையை மட்டும், முதலீடு செய்கின்றன.
இவ்வாறு கழித்துக் கொள்ளும் தொகையை, மியூச்சுவல் பண்ட் விநியோக கட்டணம், விளம்பரம் போன்ற செலவழிக்கின்றன.
இனி ஆகஸ்ட் முதல் தேதி முதல், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் யூனிட்டுகளை வாங்குபவர்கள் செலுத்தும் தொகையில் இருந்து நுழைவுக் கட்டணத்தை வசூலிக்க கூடாது என்று பங்குச் சந்தையை கண்காணிக்கும் செபி உத்தரவிட்டுள்ளது.
அதே நேரத்தில் மியூச்சுவல் பண்ட் யூனிட்டுகளை வாங்கியவர்கள், அதை விற்பனை செய்யும் போது, யூனிட்டுகளின் மதிப்பில் இருந்து 1 விழுக்காடு வசூலித்துக் கொள்ளலாம். இதை யூனிட்டுகளை விற்பனை செய்பவர்களுக்கு வழங்கும் கமிஷன், விளம்பர செலவு போன்றவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்பவர்கள், அதனை விற்பனை செய்யும் ஏஜென்டுகள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் போன்றவைகளின் சேவையில் திருப்தி அடைந்தால், அதை பொறுத்து, அவர்களே விரும்பி சேவை கட்டணம் செலுத்தலாம் என்று கூறியுள்ளது.
இதே போல் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள், தங்களுக்கு வழங்கும் கமிஷன் போன்ற விபரங்களை ஏஜென்டுகள், விற்பனை செய்யும் நிறுவனங்கள் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. |