வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டியை அதிகரித்துள்ளன.
வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதத்தையும், வங்கிகளுக்கு அளிக்கும் கடன் மீதான வட்டியையும் அரை விழுக்காடு அதிகரித்தது ரிசர்வ் வங்கி.
இதை தொடர்ந்து வங்கிகள், அவை வழங்கும் கடனுக்கான வட்டியை உயர்த்தியுள்ளன.
தனியார் துறை வங்கியான ஆக்ஸஸ் வங்கி (யூ.டி.ஐ. வங்கி) கடனுக்கான வட்டியை 0.50 விழுக்காடாக உயர்த்தியுள்ளது. இனி இது கடனுக்கு 15.25 விழுக்காடு வட்டி விதிக்கும். இந்த உயர்த்தப்பட்ட வட்டி விகிதம் உடனடியாக அமலுக்கு வருகிறது. மாறும் வட்டி விகிதத்தில் வீட்டு கடன் வட்டியை 0.50% விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்த புதிய வட்டி ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும். இனி 11 விழுக்காடு வட்டி வசூலிக்கப்படும்.
ஹெச்.எஸ்.பி.சி. (ஹாங்காங் சாங்காய் வங்கி) வைப்பு நிதிக்கான வட்டியை 0.75 விழுக்காடு அதிகரித்துள்ளது.
கார்ப்பரேஷன் வங்கி தலைவரும், மேலாண்மை இயக்குநருமான பி.சாம்ப மூர்த்தி, வங்கியின் சொத்து மற்றும் பொறுப்பு குழு விரைவில் வட்டியை பற்றி முடிவு செய்யும். வைப்பு நிதிகளுக்கும், கடன்களுக்கும் வட்டி உயர்த்துவது பற்றி பரிசீலிக்கப்படும் என்று கூறினார்.
|