அதிகரித்து வரும் விலைவாசி, பேருந்து, கல்வி, மருத்துவம் முதல் மனிதர்களுக்கு தேவையான அத்தனைக்கும் கட்டண அதிகரிப்பு.
தினம் தினம் சுமைகளை தாங்கி, விழி பிதுங்கி நிற்கும் பெருவாரியான மக்களுக்கு நாளை மக்களவையில் தாக்கல் செய்யப் போகும் பட்ஜெட்டில் நிதி அமைச்சர் சிதம்பரம் என்ன தீர்வுகளை அறிவிக்கப்போகிறார் என்பதே தீவிர எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
பொருளாதார வளர்ச்சி 9 விழுக்காடு, இது வரை இல்லாத அளவு அந்நியச் செலவாணி கையிருப்பு அதிகரிப்பு, பணவீக்கம் கட்டுப்பாட்டில், அந்நிய முதலீடு குவிகின்றது, இந்தியாவில் மருத்துவம் செய்து கொள்ள அந்நிய நாட்டில் இருந்து நோயாளிகள் வருகை, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால் இளம் தலைமுறையினரின் வருவாய் கூடியுள்ளது, இது வரை இல்லாத அளவு இந்தியா முழுப் பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டு செல்கின்றது என்று பெருமைகளை அடுக்கி திருப்தி பட்டுக் கொள்வாரா?
அல்லது கடன் சுமையால் தினமும் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள், விளை பொருளுக்கு நியாயமான விலை கிடைக்காத காரணத்தினால் அவதியுறும் விவசாயிகள், அதே நேரத்தில் உணவுப் பொருட்களின் விலை ஏற்றம், உள்நாட்டு உற்பத்தி குறைந்து, அதிக விலை கொடுத்து உணவு தானியங்களை இறக்குமதி செய்யும் நிலைமை, விவசாய துறையின் வளர்ச்சிக்கு புதிய நீர்ப்பாசன திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவாரா?
விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வார? கரும்பு, பருத்தி, பருப்பு வகைகள், எண்ணெய் வித்து உள்ளிட்ட பணப் பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க தொலை நோக்குடன் திட்டங்கள் அறிவிக்கப்படுமா? என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பு.
தொழில் வர்த்தக துறையினரும் அதிக அளவு பட்ஜெட்டில் எதிர்பார்க்கின்றனர்.
இடதுசாரி கட்சிகள் நீண்ட கால முதலீட்டில் இருந்து கிடைக்கும் லாபத்திற்கு மீண்டும் வரி விதிக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
|