மும்பை பங்குச்சந்தை குறியீடு (சென்செக்ஸ்) இன்றைய வர்த்தக நிறைவின் போது 236.20 புள்ளிகள் உயர்ந்து 17,021.85 ஆக நிலைப்பெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீடு (நிஃப்டி) 63.45 புள்ளிகள் அதிகரித்து 5,052.45 ஆக இருந்தது.
கடந்த 2 நாட்களாக சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தைகள் இன்றும் சரிவுடன் துவங்கியதால் பங்குவர்த்தகர்கள் இடையே சிறிய பதற்றம் காணப்பட்டது. அன்னிய முதலீடுகள் தொடர்பாக மத்திய அரசு புதிய முடிவு எடுக்கலாம் என்ற நிலை காணப்பட்டதால் மதியம் 1.30 மணி வரை பங்குச்சந்தைகள் சரிவுப் பாதையிலேயே பயணித்தன.
கரும்புக்கு கொள்முதல் விலை நிர்ணயிப்பது தொடர்பான பிரச்சனையில் மத்திய அரசின் கவனம் திரும்பியதாலும், அன்னிய முதலீடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பான புதிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படாததாலும், மதியம் 2 மணிக்கு மேல் பங்குச்சந்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டது.
இன்றைய வர்த்தகத்தின் போது 16,635.75 புள்ளிகள் வரை சரிந்த சென்செக்ஸ் குறியீடு, அதிகபட்சமாக 17,041.79 புள்ளிகள் வரை உயர்ந்தது. முடிவில் 17,021.85 ஆக நிலைப்பெற்றது. இதேபோல் நிஃப்டி குறியீடு 4,932.80 புள்ளிகள் வரை சரிந்த போதிலும், சந்தை நிறைவுக்கு முன்பாக 5,063.30 புள்ளிகள் வரை உயர்ந்தது.
கடந்த 2 நாள் வர்த்தகத்தின் போது 265 புள்ளிகள் வரை சரிந்த சென்செக்ஸ் குறியீடு, இன்று ஒரே நாளில் 236 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளதால், அடுத்த வாரத் துவக்கத்திலும் பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்படும் என வர்த்தகர்கள் நம்புகின்றனர்.