ராஜஸ்தான் மாநிலத்தில் ஜூன்ஜூனு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஆந்திரா, மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் போல் பாதிக்கப்படவில்லை. கடன் தொல்லையால் தற்கொலையும் செய்து கொள்ளவில்லை.
இதற்கு காரணம் என்ன? ராஜஸ்தான் விவசாயிகள் இரசாயன உரம், பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தாததே. இவர்கள் இயற்கை உரங்களை பயன்படுத்தியதால் உரம், பூச்சி கொல்லி மருந்துக்கான செலவு குறைந்தது, வருவாயும் அதிகரித்தது.
ராஜஸ்தான் விவசாயிகள் இராசயன உரத்திற்கு பதிலாக, மாட்டுச் சாணம், இலை தழைகளை மக்கச் செய்து தயாரிக்கப்பட்ட உரம், மண்புழு உரம் ஆகியவற்றை பயன்படுத்தினார்கள்.
இந்தியாவில் இயற்கை உரம், வேப்பம் புண்ணாக்கு போன்ற களைக் கொல்லிகளை பயன்படுத்துவது புதிதல்ல. சமீப காலம் வரை விவசாயிகள் தொழு உரம், மண்புழு உரம் போன்ற இயற்கை உரங்களை பயன்படுத்தி வந்தனர். பசுமை புரட்சி காலத்தில் உற்பத்தியை பெருக்குவதற்கு இராசயன உரம் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய வீரிய விதை, குறுகிய கால விதைகள் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டன.
இதனால் நிலத்தின் இயற்கையான மணிச் சத்து, சாம்பல் சத்து போன்றவை அழிந்து விட்டன. புதிய ரக பூச்சிகளும் உற்பத்தியாயின. பூச்சிகளை அழிக்க தெளிக்கப்பட்ட பூச்சி கொல்லி மருந்துகளால் நிலம், நீர் நிலைகளின் தன்மை மாசடைந்தது. அத்துடன் பூச்சிகளை உணவாக கொண்ட தவளை, பல்லி போன்ற உயிரினங்களும் அழிந்து விட்டன.
|