நீலகிரியில் மீண்டும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு - மழைராஜ்
சனி, 21 நவம்பர் 2009( 20:12 IST )
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அரபிக் கடலை நோக்கிச் செல்ல வாய்ப்புள்ளது. இதனால், நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மழை குறித்து ஆய்வு செய்துவரும் மழைராஜ் கூறியுள்ளார்.
இதுகுறித்து மழைராஜ் அனுப்பியுள்ள கடிதத்தில்,
நவம்பர் 7 ஆம் தேதி கணிப்பின்படி, பெரும்பாலான கடலோர மாவட்டங்களிலும், நீலகிரி உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்திருந்ததுபோல், மழை பெய்து வருகிறது.
அதன்பிறகு நவம்பர் 16 ஆம் தேதி கணிப்பின்படி, நவம்பர் 28 ஆம் தேதி வரை மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தேன்.
தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அரபிக் கடலை நோக்கிச் செல்ல வாய்ப்புள்ளது.
இதனால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகை, கடலூர், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் 23 அல்லது 24 ஆம் தேதி பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் நவம்பர் 28 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளது.
இதனால் நவம்பர் 24 முதல் 28 ஆம் தேதி வரை தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலும் மழை நீடிக்கும் வாய்ப்புள்ளது.