வடகிழக்கு பருவ மழை முடியும் வரை தமிழக கடலோர மாவட்டங்களிலும், தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களிலும் வரலாறு காணாத பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று மழை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் மழைராஜ் கூறியுள்ளார்.
இதுகுறித்து மழைராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு :
அக்டோபர் மாதம் 20, 28 ஆம் தேதி கணிப்புகளின் படி, அக்டோபர் 25 முதல் பரவலாக மழை துவங்கி நவம்பர் மாதம் 17 ஆம் தேதி வரை மழை பெய்யும் என கூறியபடியே, அக்டோபர் 25 ஆம் தேதி முதல் துவங்கிய மழை படிப்படியாக வலுவடைந்து வருகிறது.
இதனால் அக்டோபர் 28 முதல் 30 ஆம் தேதி வரையும் கடலோர மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மீண்டும் நவம்பர் 2 ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.
மேலும், அக்டோபர் 7 ஆம் தேதி கணிப்பின்படி, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் தூத்துக்குடிக்கு அருகே ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையும், கடலூர்-புதுச்சேரி அருகே ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையம் என இரண்டு குறைந்த காப்பறுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.
இவ்வாறு தமிழக கடல்பரப்பில் இரண்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவது எனது ஆய்வில் இதுவே முதல் முறையாகும். இதனால் தமிழக கடலோர மாவட்டங்கள் முழுவதும் மேலும் சில நாட்களுக்கு கன மழை தொடரும்.
வடகிழக்கு பருவ மழை முடியும் வரை தமிழக கடலோர மாவட்டங்களிலும், தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களிலும் வரலாறு காணாத பலத்த மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
மழை தேதியின் கணிப்பின்படி, நவம்பர் 17 ஆம் தேதி வரை வடகிழக்கு பருவ மழை தொடரும் வாய்ப்புள்ளது. தற்போது பெய்துவரும் மழையின் தீவிரம் குறையும் வரை பெய்யும் மழையின் அளவு படிப்படியாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
எனவே, கடலோர மாவட்டங்கள் அதிகம் வெள்ளத்தால் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. மேலும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது.