ஐ.ஐ.டி. - ஜே.இ.இ. தேர்வுகள் உலகிலேயே மிகவும் கடினமான தேர்வுகள் என்றால் அது மிகையாகாது. பொறியியல் தேர்வுக்கு விழுந்து விழுந்து படிக்கும் மாணவர்கள் ஒவ்வொருவரும் தான் ஒரு ஐ.ஐ.டி. மாணவனாக வேண்டும் என்ற கனவுடனேயே தீவிரமாக படிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் மாணவர்கள் ஐ.ஐ.டி- ஜே.இ.இ. தேர்வு எழுதுகின்றனர். ஆனால்...
3000 மாணவர்கள் மட்டுமே தேர்வாகின்றனர். இந்த நிலைக்கு காரணம் என்ன?
ஐ.ஐ.டி- ஜே.இ.இ தேர்விற்கு ஒவ்வொரு மாணவரும் விடா முயற்சியுடன் கடினமாகவே உழைக்கின்றனர். ஆனால் தேர்விற்கு தங்களை கூர்மையாக தயார்படுத்திக் கொள்ளும் மாணவர்கள் மட்டும்தான் வெற்றி பெறுகின்றனர்.
ஐ.ஐ.டி- ஜே.இ.இ மாணவனாக அனைவருக்கும் கனவு இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் தேர்வில் வெற்றி பெறுவதற்கான தயாரிப்புகளை எப்போது துவங்குவது என்பதில் மாணவர்களுக்கு இன்னமும் குழப்பம் தீரவில்லை.
1. 12ம் வகுப்பு தேர்வுகளுக்கு பிறகா...? 2. 11ம் வகுப்பு தேர்வுகளுக்கு பிறகா...? 3. +1 சேரும் முன் 10ம் வகுப்பு தேர்வுகளுக்கு பிறகா...?
மேற்கூறிய இந்த 3 தெரிவுகள் மாணவர்களுக்கு இருக்கிறது.
ஆனால் சமீபத்திய ஐ.ஐ.டி- ஜே.இ.இ முறைகளின் படி, 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது அல்லது 12 ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்த பிறகு என்ற 2 தெரிவுகளே உள்ளது. இந்த சூழ்நிலையில் 10ஆம் வகுப்பு தேர்வுகளை முடித்தவுடனேயே ஐ.ஐ.டி- ஜே.இ.இ. தயாரிப்புகளுக்கு அடியெடுத்து வைப்பதே சிறந்தது. ஏனெனில் 10ஆம் வகுப்பு முடித்தவுடன் ஒரு மாணவன்தான் என்ன செய்யவேண்டும் என்பதை தெளிவாக முடிவு செய்பவனாகிறான்.
மேலும் +1ல் எந்த பாடத்தை தேர்வு செய்கிறோம் என்பது மிக முக்கியம், ஏனெனில் ஐ.ஐ.டி.- ஜே.இ.இ. அடிப்படை கல்விகளில் பலமாக உள்ள ஒருவரைத்தான் தேர்வு செய்யும்.
கடினமான தெரிவுகள்தான்! ஆனால் பயப்படத் தேவையில்லை. முறையான திட்டமிடுதல் மூலம் எந்த ஒரு வாய்ப்பையும் தட்டிப் பறிக்க முடியும். கல்வியின் தரத்தில் எந்த விதமான சமரசமும் செய்து கொள்ளக்கூடாது. சரியான முடிவுகளை சரியான நேரத்தில் மன உறுதியுடன் எடுக்கும் எவரும் இந்த முயற்சியில் தோல்வியடைய வாய்ப்பேயில்லை. கடின உழைப்பு மற்றும் முறையான வழிகாட்டுதல் என்பதே இதனை எட்ட சிறந்த வழிமுறை.
முதல் முயற்சியே வெற்றி முயற்சியாக இதோ சில வழிகள் :
உங்கள் மேல் நம்பிக்கை வையுங்கள் : சரியான மனோ நிலையுடன் தயாரிப்பைத் தொடங்குங்கள். எப்போதும் தன்னம்பிக்கையான அணுகுமுறை தேவை. தொடர்ச்சியிலிருந்தும் சீரான படிப்பிலிருந்தும் விலகிவிடாதீர்கள். தேர்வுகள் குறித்த அனைத்து விதமான பயங்களையும், மயக்கங்களையும் களைந்து நம்மால் முடியும் என்று நம்பிக்கை வையுங்கள்.
|