ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

சிறுநீரக கல்லை கரைத்திடும் பெரு நெருஞ்சில் செடியின் மருத்துவ குணங்கள்!

பெரு நெருஞ்சில் அல்லது யானை நெருஞ்சில் என்று அழைக்கப்படும். பெரு நெருஞ்சில் இலையை ஒரு கைப்பிடி அளவு  எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டால் ஒரு மணி நேரம் கழித்துப் பார்த்தால் பாகு போன்று ஒரு திரவம் நீரில் கலந்து  இருப்பதைப் பார்க்கலாம். அதைத் தனியாக எடுத்து சிறிது கற்கண்டு சேர்த்து குடித்து வர உடல்சூடு, தாது இழப்பு குணமாகும்.

 
நெருஞ்சில் இலைச்சாறு 50 மில்லியளவு எடுத்து ஒரு டம்ளர் பால் அல்லது மோருடன் குடித்து வர சிறுநீருடன் இரத்தம்  போவது நிற்கும்.
 
பெரு நெருஞ்சிலைப் பிடுங்கி நீரில் ஒரு மணி நேரம் ஊறவிடவும். இந்த நீரில் பட்டு, நூல் துணிகளை ஊற வைத்து எடுக்க  அழுக்கு, கறை அகலும்.
 
நெருஞ்சில் செடியை வேருடன் பிடுங்கி நீரில் அலசி பிறகு, புளித்த கஞ்சி தண்ணீரில் இதனை 10 நிமிடம்வரை மூழ்கும்படி  செய்ய வேண்டும். இதனை வெறும் வயிற்றில் குடிக்கவேண்டும். இவ்வாறு குடிப்பதால், சிறுநீரகக் கல் கரைந்து சிறுநீர் வழியாக  வெளியேறும்
 
பெரு நெருஞ்சில் இலையை, அருகம்புல் சமூலம் ஒன்றையும் சேர்த்து ஒன்றரை லிட்டர் நீரில் போட்டு முக்கால் லிட்டராகச்  சுண்டக் காய்ச்சி வடிகட்டி, அதில் திப்பிலி குங்குமப்பூ, ஒரு சிட்டிகை சேர்த்து மறுபடியும், கால் லிட்டர் அளவிற்கு சுண்டக்
காய்ச்சி வடிகட்டி 3 நாள்களுக்கு 2 வேளை குடித்து வர உடல் சூடு, நீர் வடிதல், கண் எரிச்சல், சொறுக்கு மூத்திரம், நீரிழிவு,  வேகமின்றி அடைப்பட்டதுபோல சிறுநீர் வெளியேறுவது குணமாகும்.
 
நெருஞ்சில் இலையை நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி, அதேயளவு அருகம்புல் எடுத்து நிழலில்  உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி இரண்டையும் கலக்க வேண்டும். இந்தப் பொடியை அரை தேக்கரண்டி அளவு  எடுத்து ஒரு டம்ளர் பசும்பாலில் கலந்து 2 வேளை குடித்து வர வெட்டை, இரத்தப்போக்கு குணமாகும்.
 
நெருஞ்சில் விதையினை பாலில் அவித்து நிழலில் உலர்த்திப் பொடி செய்து ஒரு சிட்டிகையளவு வெந்நீரில் சாப்பிட்டு வர தாது  விருத்தியாகும். இதையே இளநீரில் சாப்பிட்டு வர சிறுநீர்க் கட்டு, சதையடைப்பு, கல்லடைப்பு குணமாகும்.
 
நெருஞ்சில் காயைப் பொடி செய்து ஒரு தேக்கரண்டி அளவு ஒரு டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை குடித்து வர நீரடைப்பு  சதையடைப்பு, வெட்டை, எலும்புருக்கி குணமாகும்.
 
நெருஞ்சில் முள்ளை வெந்நீரில் ஊற வைத்து வடிகட்டி நீரை மட்டும் குடிக்க சிறுநீரைப் பெருக்கும்.