10 பைசா இல்லாத ஓட்டுநர் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்: தங்க வியாபாரி லீலை


லெனின் அகத்தியநாடன்| Last Modified சனி, 24 டிசம்பர் 2016 (10:26 IST)
பணமே இல்லாத தனியார் வாடகைக் கார் ஓட்டுநரின் வங்கிக் கணக்கில் ரூ. ஏழு கோடி டெபாசிட் செய்யப்பட்டது தொடர்பாக இரண்டு பேரை, வருமான வரித்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

ஹைதராபாத்தில் உபேர் வாடகை கார் நிறுவனத்தில், ஓட்டுநராகப் பணியாற்றி வருபவரின் வங்கிக் கணக்கில் சுத்தமாக பணம் இல்லாத நிலையில், திடீரென ரூ. ஏழு கோடி அளவிற்கு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 8ஆம் தேதிக்குப் பிந்தைய, சில வாரங்களில் இந்த தொகை முழுவதும் வரவு வைக்கப்பட்டு, பின்னர் தங்க வியாபாரி ஒருவரது வங்கிக் கணக்குக்குப் பல கட்டமாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனைக் கண்டறிந்த வருமான வரித்துறை அதிகாரிகள், வாடகை கார் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், ஓட்டுநர் கணக்கு வைத்திருந்த, ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் வங்கிக் கிளையில் உள்ள சிசிடிவி-க்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் இரண்டு ஓட்டுநர்கள் இந்தப் பணத்தைச் செலுத்தி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த இரு ஓட்டுநர்களையும் வருமான வரித்துறையினர் கைது செய்தனர். தற்போது, இந்த ஏழு கோடி ரூபாய் பணத்தையும், பிரதமரின் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் செலுத்த, சம்பந்தப்பட்டவர்கள் ஒப்புக்கொண்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :