வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (17:38 IST)

காங். தேவையானது நான் இல்லை.. பிரசாந்த் கிஷோர் டிவிட்!

பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் சேர மறுத்துவிட்டது குறித்து பிரசாந்த் கிஷோர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

 
இந்தியாவின் மிகப்பெரிய தேசிய கட்சியாக இருந்த காங்கிரஸ் தற்போது தன் செல்வாக்கை பெரிதும் இழந்துள்ளது. தேர்தலுக்கு தேர்தல் தொடர்ந்து தோல்வி முகம் கண்டு வரும் காங்கிரஸ் சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டமன்ற தேர்தலிலும் பல இடங்களில் தோல்வியை தழுவியது. தற்போது இந்தியாவில் 2 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.
 
ராகுல்காந்தியும் கடந்த நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை காட்டி தலைவர் பதவியிலிருந்து விலகியதிலிருந்து காங்கிரஸ் சரியான திசையின்றி பயணித்து வருகிறது. தற்போது சோனியா காந்தி தற்காலிக தலைவராக இருந்தாலும் கட்சியை மேம்படுத்துவதற்கான பெரிய நடவடிக்கைகள் எதும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை.
இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலை காங்கிரஸ் எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து அக்கட்சியின் மேலிடத் தலைவர்கள், I-PAC நிறுவனரும் தேர்தல் வியூக வல்லுநருமான பிரஷாந்த் கிஷோருடன் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினர். பிரஷாந்த் கிஷோர் விரைவில் காங்கிரஸ் கட்சியில் சேருவார் என்றும் தகவல்கள் பரவின. 
 
பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் சேர மறுத்துவிட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலா அறிவித்துள்ளார். இது குறித்து பிரசாந்த் கிஷோர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, காங்கிரசில் சேர்ந்து, தேர்தலுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளும்படி காங்கிரஸ் அளித்த பெருந்தன்மையான வேண்டுகோளை மறுத்துவிட்டேன். 
 
நான் சேர்வதைவிட காங்கிரசுக்குத் தேவையானது தலைமைதான். கட்சிக் கட்டமைப்பில் உள்ள பிரச்சனைகளை தீர்க்கும் வகையிலான மாற்றங்களைக் கொண்டுவரும் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும். அதற்கான கூட்டு விருப்பம் தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.