வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 18 மே 2018 (17:12 IST)

சுப்ரீம் கோர்ட் அதிரடியை அடுத்து கர்நாடக கவர்னர் புதிய உத்தரவு

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்காததால், 104 எம்.எல்.ஏக்கள் கொண்டு தனிப்பெரும் கட்சியாக இருந்த பாஜகவை ஆளுனர் வஜூபாய் வாலா ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். அதுமட்டுமின்றி பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடியூரப்பாவுக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுத்தார்.
 
இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் இருதரப்பு வாதங்களுக்கு பின்னர் நாளை மாலை 4 மணிக்குள் முதல்வர் எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
 
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் இந்த அதிரடி உத்தரவை அடுத்து சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்த கவர்னர் வஜூபாய் வாலா, நாளை காலை 11 மணிக்கு சட்டமன்றத்தை கூட்ட உத்தரவிட்டார். முன்னதாக ஆளுனர் வஜூபாய் வாலா, பாஜக எம்.எல்.ஏ  போப்பையா என்பவரை தற்காலிக சபாநாயகராக நியமனம் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது