வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Veeramani
Last Modified: செவ்வாய், 6 மே 2014 (14:04 IST)

ஊழல் செய்யும் அதிகாரிகளை விசாரிக்க அரசின் அனுமதி தேவையில்லை - உச்சநீதிமன்றம்

ஊழல் செய்யும் அதிகாரிகளை விசாரிக்க சிபிஐ அமைப்பு, மத்திய அரசிடம் முன்அனுமதி பெற தேவையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
ஊழல் குற்றம்சாற்றப்பட்ட உயர் அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ள சிபிஐ போன்ற அமைப்புகள் அரசு முன்அனுமதி பெற வேண்டும் என்ற டெல்லி சிறப்பு போலீஸ் சட்டப் பிரிவு 6-ஏ-வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
 
பாஜகவின் சுப்ரமணிய சுவாமி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, ஏ.கே.பட்நாயக், எஸ்.கே.முகோபாத்யாயா, தீபக் மிஸ்ரா, இப்ரஹிம் கலிபுல்லா அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு மனு விசாரணைக்கு வந்தது.
 
மனுவை விசாரித்த அரசியல் சாசன அமர்வு, "இந்த சட்டப்பிரிவு ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இந்த சட்டம் இணைச் செயலாளர் மற்றும் அதற்கும் மேல் உள்ள பதவிகளை வகிக்கும் உயர் அதிகாரிகள் ஊழல் செய்திருந்தாலும் அவர்களை பாதுகாக்கும் வகையில் உள்ளது. உயர் அதிகாரிகள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களுக்கு இத்தகைய பாதுகாப்பு தேவையில்லை.
 
மத்திய அரசில் இணைச் செயலாளர் தகுதி அளவிலான பணியில் இருப்பவர்கள் இச்சட்டத்தால் பயன் பெறுகின்றனர். ஆனால் மாநில அரசில் பணி புரியும் அதிகாரிகளுக்கு இத்தகைய சலுகை இல்லை. ஊழல் தடுப்புச் சட்டம் ஊழலை ஒழிப்பதற்காகவே உள்ளது. அப்படி இருக்க இது போன்ற சட்டங்களால் ஊழல் அதிகாரிகளை பாதுகாக்கக் தேவையில்லை. குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் உயர் அதிகாரிகள், கடை நிலை அதிகாரிகள் என பேதம் பார்க்கத் தேவையில்லை.
 
எனவே, இணைச்செயலாளர், அதற்கு மேலான அதிகாரிகளை விசாரிக்க அரசு அனுமதி தேவையில்லை. மத்திய அரசின் அனுமதியின்றி சிபிஐ அதிகாரிகள் விசாரிக்கலாம்." இவ்வாறு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது.