ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 2 ஜூன் 2024 (10:52 IST)

தேர்தல் முடிந்தவுடன் சுங்க கட்டணம் உயர்வு..! இன்று நள்ளிரவு முதல் அமல்..!!

மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த ஏப்ரல் 1-ம் தேதி சுங்கச்சாவடி கட்டணம் மாற்றியமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானது. இதையடுத்து சுங்கச்சாவடி கட்டண மாற்றம் இரண்டு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தது.
 
நேற்றுடன் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி சுங்கச்சாவடிகளில் ஒரு முறை பயணம் செய்வதற்கான கட்டணமும், ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணமும் ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்த்தப்படுகிறது. மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணமும் ரூ.100 முதல் ரூ.400 வரை உயர்த்தப்படுகிறது.
 
தேசிய நெடுஞ்சாலைகளில் 55 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில், முதற்கட்டமாக 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வர உள்ளது. சென்னை புறநகரில் உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் ஆகிய சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

மேலும், கல்லகம் - கருப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள மணகெதி, திருச்சி - கருப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள கல்லக்குடி, வேலூர் - விழுப்புரம் நெடுஞ்சாலையில் உள்ள வல்லம், திருவண்ணாமலை இனம் கரியாந்தல், விழுப்புரம் தென்னமாதேவி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளிலும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

 
சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு லாரி உரிமையாளர்கள், வாகன ஓட்டிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சுங்கச்சாவடி கட்டண உயர்வு காரணமாக காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.