மேஜை விரிப்புகள், தலையணை உறைகள், திரைச் சீலைகள் மட்டுமின்றி நாம் உடுத்திக் கொள்ளும் ஆடைகளில் கூட பேப்ரிக் பெயிண்டிங் செய்து அழகிய வண்ண வண்ண டிசைன்களை உருவாக்குதல் முடியும். இவ்வுடைகள் பார்ப்பதற்கு மிகவும் நேர்த்தியாகவும், கண்கவர் வண்ணங்களில் தீட்ட முடிவதால் மற்றவர் வியக்கும் வகையிலும் அமைகின்றன.
"பேப்ரிக் பெயிண்டிங் கற்றுக் கொள்வது எளிது. முதலில் சிறு தாளில் வண்ணம் தீட்டி பழகி ஒரளவு பயிற்சி செய்த பின் புடவை, சுடிதார் போன்றவைகளில் பயிலலாம்," என்கிறார் இப்பயிற்சியை முறையாகக் கற்றுத் தரும் திருமதி. ரமணி வர்மா. இவ்வகைக் கலைகளை நன்கு கற்று, நல்ல பயிற்சிக்குப் பின் பிறருக்கு கற்றுத் தந்தும், புடவைகளில் பெயிண்டிங் செய்தும் வீட்டிலிருந்தபடியே இல்லத்தரசிகள் பணம் சம்பாதிக்கவும் முடியும் என்பது இவரது கருத்து.
பெவிக்ரைல் பேப்ரிக் வண்ணங்கள்:
1) மரூன்(Maroon-எண்:14) 2) வெள்ளை(White-எண்:27) 3) அழுந்திய இலைப் பச்சை (Sap Green-எண்:21)
பிரஷ் - வட்டமான முனைகள் கொண்டவை (Round edge) No: 1, 5. பேலட் (Palette) பென்சில், கார்பன் காகிதம், டிசைன் பேப்பர், எம்பிராய்டரி ப்ரேம் (Embroidery frame), தண்ணீர்
செய்முறை விளக்கம்:
1. வண்ணம் தீட்டப் போகும் துணி பருத்தித் துணியாக (Cotton) இருந்தால் முதலில் துணியிலுள்ள கஞ்சிப் பசையை நன்கு அலசி எடுத்து விட வேண்டும்.
2. கார்பன் காகிதத்தை துணியின் மீது வைத்து, வண்ணம் தீட்டப் போகும் டிசைனை சரியாக வரைந்துக் கொள்ளவும். பிறகு அந்த டிசைன் வரும் இடத்தை எம்பிராய்டரி ப்ரேமில் வைத்து உறுதியாக பிணைத்து விடவும்(எம்பிராய்டரி செய்வதற்கு முன் செய்வது போல)
3. பூக்கள்: பூக்களுக்கு மூன்று வித வண்ணங்கள் தேவைப்படுகின்றன. இவை: மரூன், இளம் பிங்க் மற்றும் அழுந்திய பிங்க். வெள்ளை வண்ணத்தை தேவையான அளவு மரூனுடன் கலக்கும் போது முதலில் அழுந்திய பிங்க், மேலும் சிறிது வெள்ளை நிறம் கலந்தால் வெளிர் பிங்க் வண்ணங்களும் கிடைக்கும்.
4. பொதுவாக பேப்ரிக் பெயிண்டிங்கிற்கான டிசைன் புத்தகங்கள் ஸ்டேஷனரி மற்றும் பேன்சி கடைகளில் கிடைக்கின்றன. இவற்றில் காட்டியுள்ள படிகளின் படி வண்ணங்களைத் தீட்ட வேண்டும்.
முதலில் 5ம் எண்ணுள்ள பிரஷ் கொண்டு பூவின் முதல் இதழில் வெளிர் பிங்க் வண்ணமும், இரண்டாவது இதழுக்கு மரூன் வண்ணமும் தீட்ட வேண்டும். இப்படி மேற்கூறிய முறையிலேயே வண்ணங்களைத் தீட்ட வேண்டும்.
இப்படி வண்ணங்களைத் தீட்டும் போது இதழ்களின் வெளிப்பகுதியில் தொடங்கி உட்புறம் நோக்கி தீட்ட வேண்டும். இதழின் முனைகளை 1ம் எண் பிரஷ் கொண்டு கூர்மையாகத் தீட்ட வேண்டும்.
5. இலைகள்:
வண்ணங்கள் பச்சை மற்றும் வெள்ளை.
பச்சை வண்ணத்துடன் வெள்ளை வண்ணம் கலக்கும் போது வெளிர் பச்சை நிறம் கிடைக்கும்.
6. முதலில் 1-ம் எண் பிரஷ் கொண்டு படத்தில் காட்டியுள்ளது போல் முதலில் அழுத்தமான பச்சை வண்ணத்தையும், பிறகு வெளிர் பச்சை நிறத்தையும் இரண்டு கோடுகளுக்கிடையில் தேவையான இடைவெளி விட்டு சீராகத் தீட்ட வேண்டும்.
7. வண்ணங்களை சிறிய அளவில் தண்ணீர் கலந்து இளக்கிக் கொள்ளலாம். நீர் அதிகமாகிப் போனால் துணியில் வண்ணம் பரவி விடும். கவனமாகத் தண்ணீரை கொஞ்சமாகக் கலந்துக் கொள்ளவும்.
8. இருபத்து நான்கு மணி நேரம் (ஒரு நாள்) அப்படியே காய விட்டுப் பின் துணியை இஸ்திரி செய்யலாம். இவ்வகையில் வண்ணம் தீட்டிய துணிகளை எப்போதும், பின்புறம் வைத்துத் தான் இஸ்திரி போட வேண்டும். அப்போது தான் வண்ணங்கள் சிதில் சிதிலாக ஆகாமல் அப்படியே இருக்கும்.
திருமதி ரமணி வர்மா, கொட்டிவாக்கம், பழைய மகாபலிபுரம் சாலை, சென்னை-96. தொலைபேசி எண்கள்: 43593063; 24540823 - இந்த எண் இடையில் சிறிது நாட்கள் சரியாக வேலை செய்யவில்லை என்பதை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். இப்போது இரண்டு எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
|