தீபாவளி வந்தாலே புது உடைகள், இனிப்பு, பலகாரம், பட்டாசு. இதற்கு எல்லாவற்றுக்கும் மேலாக, விடுமுறை!
என்ன வாங்க வேண்டும், எங்கு வாங்க வேண்டும் என்பதைப் பற்றி தோழிகளோடு பேசியே தொலை பேசிக் கட்டணம் ஏறியிருக்கும். ஆனால் தீபாவளி எதற்கு கொண்டாடப்படுகிறது என்று சில கல்லுhரி மாணவிகளிடம் கேட்ட பொழுது கிடைத்த பதில்கள்:
சுனிதா : "தீபங்களை லைனா வைக்கிறதனால் தான் இந்தப் பண்டிகையை தீபாவளின்னு சொல்றோம்."
கல்பனா : "ராட்சஸனைக் கொன்ன நாள் தான் தீபாவளி."
லக்ஷ்மி : "நரகாசுரன் செத்த நாள் தான் தீபாவளி."
ப்ரேமலதா :" நரகாசுரன் செத்ததுக்கு நாம சந்தோஷப்படுற நாள் தான் தீபாவளி."
பூஜா : "தீபாவளின்னா தீபம் வச்சு, பட்டாசு வெடிப்போம்."
தீபாவளி என்றால் என்ன? அது எதற்கு கொண்டாடப்படுகிறது பார்ப்போமா? தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பல தொல்லைகள் கொடுக்கும் நரகாசுரனிடமிருந்து எங்களை காப்பாற்ற வேண்டும் என ஒரு முறை இந்திரன் கண்ணனிடம் வேண்டினான்.
உடனே கண்ணன் "தேவேந்திரா நான் உங்களை காப்பாற்றுகிறேன்" என்று ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார்.
கண்ணன் கருடவாகனத்தில் நரகாசுரன் இருக்குமிடத்தை நோக்கிப் பார்த்தார், அவனது கோட்டைகளைத் தகர்த்து நகரின் உள்ளே சென்று நரகாசுரனை சங்கு முழங்கி போருக்கு அழைத்தார்.
சங்கொலி கேட்ட அசுரனின் மந்திரி தனது ஏழு மகன்களுடன் போரில் இறங்கி பிறகு கண்ணனின் சக்ராயுதத்தால் மாண்டு போனார்கள்.
இதையடுத்து நரகாசுரன் தனது படைகளைத் திரட்டி போர்க்களத்திற்கு வந்தான். அவனது படைகள் கண்ணனின் அஸ்திரங்களால் அழிந்தது. நரகாசுரனும் சக்தி, சூலம் போன்ற ஆயுதங்களை கண்ணன் மேல் வீசினான். கடைசியாக சக்ராயுதத்தை கண்ணன் அவன் மேல் ஏவி அசுரனை கீழே சாய்த்தார்.
அப்போது பூமாதேவி அங்கு வந்து அவனுக்கு அருள்புரியுமாறு வேண்டினாள். கண்ணனும் அருள் புரியத் தீர்மானித்தார். இதனால் நரகாசுரன் தான் மறையும் இந்த நாளை எல்லோரும் மகிழ்ச்சியாக கொண்டாடவேண்டும் என வேண்டினான். கண்ணனும் `அப்படியே' என்று சொல்லி அருள் புரிந்தார்.
அந்த நாளைத் தான் ( நரக சதுர்த்தி ) தீபாவளி என்று கொண்டாடுகிறோம்.
|