புதிதாகப் பிறந்த குழந்தைகள் திடீரென்று இறந்து விடும் நோய்க்குப் (Sudden Infant Death Syndrome (SIDS)) புகையிலைதான் முக்கியக் காரணம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
லண்டனில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக் கழகத்தின் குழந்தைகள் நலக்கல்வி நிறுவனம் நடத்திய ஆய்வு, 'SIDS நோயினால் இறந்த பத்து குழந்தைகளின் தாய்மார்களில் 9 பேர் புகைபிடிக்கும் பழக்கம் உடையவர்கள்' என்று கூறுகிறது.
மேலும், SIDS நோயினால் குழந்தை பாதிக்கப்படும் வாய்ப்பு, சாதாரணத் தாய்மார்களைவிட புகைபிடிக்கும் பழக்கமுடைய தாய்மார்களுக்கு 4 மடங்கு அதிகம் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
புகையிலைக்கும் குழந்தை மரணத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து உலகளவில் நடத்தப்பட்ட 21 ஆய்வுகளின் முடிவுகளை அடிப்படையாக் கொண்டு, குழந்தை நலத்துறை வல்லுநர் பீட்டர் ஃபிளெமிங், மூத்த ஆய்வாளர் டாக்டர் பீட்டர் பிளேர் ஆகியோர் இந்தப் புதிய ஆய்வை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது, குழந்தை பிறப்பதற்கு முன்பும், பிறந்த பின்பும் புகையிலை எவ்வாறு பாதிக்கிறது என்ற உண்மையை கண்டுபிடிக்க விரும்பினோம்.
அண்மையில் பொது இடங்களில் புகைபிடிக்க அரசு தடைவிதித்து உள்ளது. எனவே வீடுகளுக்குள் புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
இதனால் கருவுற்ற பெண்களும், புதிதாகப் பிறந்த குழந்தைகளும் புகையிலையினால் பாதிக்கப்படுகின்றனர்.
புகையிலைதான் SIDS நோய்க்கு முக்கியக் காரணம் என்பதற்கு பல வலுவான ஆதாரங்கள் உள்ளன. எனவே இன்று முதல் எல்லா பெற்றோர்களும் புகை பிடிப்பதை நிறுத்தினால் 60 விழுக்காடு SIDS இறப்புகளைத் தடுக்க முடியும்.
புகைபிடித்தலுக்கு எதிரான விளம்பரங்கள் நல்ல பலனைத் தந்துள்ளன. இதனால் கடந்த 15 ஆண்டுகளில், கருவுற்ற பெண்களுக்கு இடையில் புகைபிடிக்கும் பழக்கம் 30இல் இருந்து 20 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
அதே நேரத்தில் கருவுற்ற நேரத்தில் புகைபிடித்த பெண்களுக்குப் பிறந்த குழந்தைகள் SIDS நோயினால் தாக்கப்பட்டு இறந்த விகிதம் 57-இல் இருந்து 86 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
எனவே கருவுற்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ள பகுதிகளில் புகைபிடிக்கத் தடைவிதிக்கப்பட வேண்டும்.
பெற்றோர்கள் புகைபிடிக்கத் தடை விதிப்பதன் மூலம், கருவுற்ற சமயத்தில் புகைப்பதைத் தடுக்க முடியும். வீடுகளில் புகையிலையைத் தடை செய்வதன் மூலம் SIDS தாக்குதலைக் குறைக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
|