சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பள்ளிகளில் குடியுரிமைப் பயிற்சி என்று ஒரு வகுப்பு இருந்தது. பின்னர் சில மாற்றங்களுடன் இதுவே நன்னடத்தை அறிவியல் (Moral Science) என்று அழைக்கப் பட்டது. வாரம் ஒரு முறை தான் என்றாலும், மாணவ மாணவிகள் இந்த வகுப்பை மிக ஆவலோடு எதிர்பார்ப்பார்கள்.
இதற்கான காரணம், இந்த வகுப்புகள் மிகவும் சுவாரசியமாகவும் எளிதாகவும் இருக்கும். மிக எளிதாகச் செய்யும் சில பயிற்சிகள் தவிர, மற்றவற்றையெல்லாம் ஆசிரியர்கள் எடுத்துச் சொல்லி விளக்குவதால் ஒரு சொற்பொழிவைக் கேட்பது போல் "லைட்" ஆக இருக்கும்.
ஆனால் ஆசிரியர் கூறும் அறிவுரைகள் பயனுள்ளவையாகவும், பொருள் பொதிந்தவையாகவும் இருக்கும். விடுதலைப்போராட்டம், அதில் ஈடுபட்ட தலைவர்கள், அவர்களுடைய வரலாறு, நாட்டுப்பற்று, நம் தேசியக் கொடியின் பின்னணி, அதன் மீது நாம் செலுத்த வேண்டிய மரியாதை போன்றவற்றை ஆசிரியர் ஒரு கதைபோல் கூறுவார்.
இவை தவிர ஒரு நல்ல குடிமகன் எப்படி நடந்து கொள்ள வேண்டும், அவனுடைய வாக்குரிமை, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு, பெரியவர்களிடமும் ஆசிரியர்களிடமும் எப்படிப் பணிவாக நடந்துக் கொள்வது, பண்பு, ஒழுக்கம் போன்றவற்றைப் பற்றியெல்லாம் ஆசிரியர் கதைகள் மூலம் விளக்குவார்.
பெரும்பாலும் மற்ற வகுப்புகளெல்லாம் முடிந்த பின்பு, இளமாலைப் பொழுதில் (எங்கள் பள்ளியில் ஒரு பெரிய மரத்தடி நிழலில்) இந்த வகுப்பு நடக்கும். மாணவிகளும் ஆசிரியர் சொல்வதை அமைதியாகக் கேட்பர்... சில நேரங்களில் பாரதியார் மற்றும் பிற கவிஞர்கள் எழுதிய நாட்டுப்பற்று மிகுந்த பாடல்களைப் பாடியும், கேட்டும் மகிழ்ந்திருப்பார்கள்.
இந்தக் குடியுரிமைப் பயிற்சி வகுப்புகள் இப்போதெல்லாம் வழக்கத்தில் உள்ளனவா என்று தெரியவில்லை. ஒரு வேளை இதே கல்வியையும், உணர்வுகளையும் மற்ற பாடங்களின் இடையிலேயே ஆசிரியர்கள் புகுத்துவது போல் பாடத்திட்டங்கள் அமைந்திருக்கின்றனவோ என்று தோன்றுகிறது.
எவ்வளவு தான் பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்து வளர்த்தாலும், பள்ளியில் மற்ற சக மாணவர்களுடன் அமர்ந்து, மதிப்பிற்குரிய ஆசிரியரின் வாய்மூலம் வரும் அறிவுரைக்குத் தனி மதிப்பு தான்!
அமைதியான சூழலில் கேட்கும் அந்த அறிவுரைகள் மனத்தின் ஆழத்தில் பதிந்து என்றும் நிலைத்திருக்கும்.
சில வீடுகளில் பிள்ளைகள் பெற்றோரை எடுத்தெறிந்து பேசுவதைப் பார்க்க நேரிடுகிறது. அடுக்குமாடி வீடுகளில் வசிக்கும் குடிமக்கள் சுற்றுப்புறத் தூய்மை பற்றிக் கவலைப்படுவதில்லை. அதற்கு ஒரு நற்பணி மன்றம் தேவைப்படுகிறது.
இவையெல்லாவற்றையும் பார்க்கும்போது, ஒரு ஆணோ, பெண்ணோ ஒரு நல்ல குடிமகனாக / குடிமகளாக வாழச் சில அடிப்படைக் குணங்கள் தேவை என்றும், வளரும் இளம் பிள்ளைகளாக இருக்கும் பொழுதே அடிப்படைப் பயிற்சி மூலம் இதற்கு வித்திட்டால் நாளை நல்ல குடிமக்களாக அவர்கள் விளங்குவார்கள் என்றும் தோன்றுகிறது.
இதனால் மாணவர்கள் நிச்சய்ம் பயன்பெறுவார்கள். அவர்கள் மேம்பாட்டால் நாடு வளம் பெற்று முன்னேறும். நாட்டின் எதிர்காலம் இன்றைய மாணவர்கள் - இளைஞர்கள் கையில் இருக்கிறதல்லவா?
|