முன்பெல்லாம் குழந்தைகள் பள்ளி விட்டுவந்ததும் வெளியே விளையாடப் போய்விடுவார்கள். இப்போதெல்லாம் வீட்டிற்குவீடு பெரும்பாலும் கம்ப்யூட்டர்கள் இருப்பதால் அவர்கள் தங்கள் நேரத்தை அதில்தான் செலுத்துகிறார்கள்.
விஞ்ஞான முன்னேற்றத்தில் சாதகம் நிறைய எனினும் பாதகமும் அதில் அதிகம்தான். கணிணியின் மூலம் பல தகவல்களை உட்கார்ந்த இடத்திலிருந்து தெரிந்துகொள்கிறோம் என்பது மறுக்கமுடியாத உண்மை. அமெரிக்க கல்வித்துறை வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி 5வயதிலிருந்து 17 வயதிலான குழந்தைகள் 90% கணினியை உபயோகப்படுத்துகிறார்கள் என்று தெரிய வந்தது.
இதில் 22% குழந்தைகள் ஐந்து வயதினராயும் 50% குழந்தைகள் ஒன்பது வயதினாரும் உள்ளனர்.
அமெரிக்கக் கல்வித் துறையின் கணக்கின்படி இணைய இணைப்பு வீட்டிற்கு 78% பள்ளிக்கு 68% என்று அனுமதிக்கபடுகிறதாம்.
வீட்டுப்பாடம் செய்ய அது தொடர்பான ஆராய்ச்சி விளக்கங்களுக்கு குறிப்பு சேர்க்க இணையதளத்தை பயன்படுத்தும் மாணவர்கள் 5 வயதிலிருந்து 17வயது மாணவர்கள்தான். அறிவு சார்ந்த விஷயமென்றாலும் நீண்ட நேரம் வேலைச் செய்யும் குழந்தைகளுக்கு உயசயீயட வரnநேட என்னும் நோய்வரவும் மூட்டுவலி வரவும் நேரிடுகிறது. கண்பார்வை கெடுகிறது. முதுகை கூன் போட்டு அமர்ந்து கொள்வதால் நாளைடைவில் முதுகும் பலமிழக்க வாய்ப்பு உண்டாகலாம்.
கம்ப்யூட்டரில் விளையாடுவதற்கு நிறைய குறுந்தகடுகள் வந்துவிட்டன. இந்த விளையாட்டுகளில் குழந்தைகள் ஒருவிதமான மந்த நிலைக்கு ஆளாக வழிபிறக்கிறது.
தனியே அமர்ந்து இப்படி விளையாடும் குழந்தைகள் குழு விளையாட்டுகளில் சேர்வதில்லை இதனால் உடல்மொழியை இவர்கள் கற்க முடிவதில்லை. குழு விளையாட்டில்தான் விட்டுகொடுத்தல் திறமைகளைக் காட்டுதல் என்பதெல்லாம் சாத்தியம்.
மின்மடல் அனுப்புவதையும் கற்றுக் கொண்டுவிடுகிறார்கள் வார்த்தைகளை சுருக்கி சட்டென பதில் மடல் அனுப்பிவிடுவதால் மூளையை உபயோகித்து கற்பனை சேர்த்து மெருகூட்டி எழுதமுடிவதில்லை. கைவிரல்களுக்கு செல்லும் ரத்த ஓட்டத்திற்கு எழுதும் பயிற்சி நல்லதென்பார்கள். இப்போது கணிணி மூலம் அது குறைந்தே போய்விட்டது.
இணையதளத்தில் சூதாட்டங்கள் பெருகிவிட்டன. இந்தப்பழக்கத்தில் மேல்நாட்டுக் குழந்தைகள் அதிகம் இறங்கிவிட்டதாக ஆராய்ச்சி தகவல் கூறுகிறது. இந்தியாவிலும் இந்த ஆபத்து மெல்ல மெல்ல பரவி வருகிறது.
சென்ற வருடம் நியூஜெர்சி நகரில் 7ஆம் வகுப்புப் படிக்கும் மாணவன் இணையத்தில் நடந்த சூதாட்டத்தில் செய்த மோசடியினால் சிறை செல்ல நேர்ந்தது.
12வயது சிறுமி இணையத்தில் முகம்தெரியாத ஒருவனின் அன்பான பேச்சில் கவரப்பட்டு தன் விலாசத்தை தெரிவிக்க சைபர் செக்ஸில் ஈடுபட்ட ஒருவன் அவளை மால்(பெரிய சூப்பர்மார்க்கெட்) வரச்சொல்லி அவளை பாலியல் பலாத்காரம் செய்து பிறகு வெளியே அதை சொல்லிவிடுவாளோ என சிறுமியை கொலையும் செய்துவிட்டான்.
நம் நாட்டிலும் குழந்தைகள் பலரின் நேரத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது கம்ப்யூட்டர் என்றால் அதுமிகை இல்லைதான். பெற்றோர்களின் அனுமதி மற்றும் துணையுடன் குழந்தைகள் கணிணியை பயன்படுத்துவது அவர்களுக்குப் பாதுகாப்பு.
இதற்குப் பெற்றோர்கள் குழந்தைகளுடன் தங்கள் நேரத்தை செலவு செய்தல் வேண்டும். அலுவலகம் செல்லும் பெற்றோர்கள் சீக்கிரமாய் வீடு திரும்பி வந்து குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். பண்பு, கலாசாரம் போன்றவற்றை வளரும் பருவத்திலேயே சொல்லித் தரவேண்டும். வீட்டு உறவினர்கள் வரும்போது அவர்களையும் மறந்து கம்ப்யூட்டரில் கிடக்கும் குழந்தைகளிடம் அதுதவறு என எடுத்துரைக்க வேண்டும். மாறாக சிலர், என் பையன் சதா கம்ப்யூட்டர்ல இருப்பான்; மேதாவி !"என பெருமையடித்துக் கொள்வதை நிறுத்தவேண்டும்.
முகம் தெரியாத மனிதர்களுடன் சாட்டிங் செய்யும்போது அதிகம் விவரம் கூறாமலிருக்க சொல்லித் தரவேண்டும். புகழ்ச்சியான கவர்ச்சியான பேச்சில் சின்னஞ்சிறுபெண்கள் மயங்குவது இயல்பு. அதை முன்கூட்டியே எச்சரித்து வைக்கவேண்டும். பழகும் மனிதர்களைப் பார்வையால் எடைபோட தெரிந்துகொள்ள வைக்கவேண்டும்.
முதியவர் எனும் உரிமையில் அத்துமீறி சில்மிஷம் செய்யும் பெருசுகளை சமாளிக்க சொல்லித்தரவேண்டும். குட் டச்(good touch) பேட் டச் (bad touch) என்றால் என்ன என்பதை ஒருதாய் தன் மகளுக்கு விளக்க இயலும். உடலின் மறைந்த இடங்களில் வேற்று மனிதர்கள் கை படும்போது அதை எதிர்த்து அவர்களை அவமானப்படுத்தவும் அச்சமின்றி எதிர்கொள்ளவும் பழக்கப் படுத்தவேண்டும்.
அதீதமான விஞ்ஞான முன்னேற்றத்தில் உலகம் விரைந்து கொண்டிருக்கிறது. குழந்தைகளும் புத்திசாலிகளாக, எதையும் அறியத் துடிக்கும் உத்வேகத்தில் இருக்கின்றார்கள். அவர்களை நல்வழிப்பாதையில் கொண்டு செல்லும் பொறுப்பும், வளரும் குழந்தைகளின் எதிர்காலமும் பெற்றோர்களின் கையில்தான் இருக்கிறது.
|