"சேவ் தி சில்ட்ரன்" (Save the Children) என்ற ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த அமைப்பின் உதவியோடு "துளிர் குழந்தை பாலியல் கொடுமை தடுப்பு மற்றும் குணமளிக்கும் மையம்" சென்னை பள்ளிகளில் 11ம் வகுப்பு மாணவர்களிடையே ஒரு ஆய்வினை நடத்தியது.
பரவிவரும் சமுதாய நோயான குழந்தைகள் பாலியல் கொடுமையின் தீவிரத்தை உணர்ந்த ஐ.நா. சபையும் இந்திய அரசும் தற்போது முறையே உலக அளவிலும், இந்திய நாட்டிலும் பல ஆய்வுகளை நடத்தி வருகின்றன.
சென்னையில் இந்தக் கொடுமை எந்த அளவிற்குப் பரவி உள்ளதென்பதை அறியவும், இந்நிகழ்வுகளைச் சூழ்ந்துள்ள பிரச்சினைகளையும், அவற்றின் வீச்சையும் பற்றி அறிந்து கொள்ளவும் சென்னையின் 426 பள்ளிகளுக்கும் அந்தப் பள்ளியின் 11ம் வகுப்பு மாணவர்களை ஆய்வில் உட்படுத்தக் கோரி அனுமதிக் கடிதம் அனுப்பப் பட்டது. ஆய்வில் பல பள்ளிகள் விருப்பம் தெரிவித்தாலும் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் தகவல் திரட்ட 24 பள்ளிகளால் மட்டுமே அனுமதி வழங்க முடிந்தது. அந்தப் பள்ளிகளின் 2211 மாணவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. மாணவிகள் இதில் 1364 மாணவர்கள் 847 பேர்கள் ஆவார்கள்.
அவர்களிடம் தகவல் திரட்டு முன் குழந்தை பாலியல் கொடுமை பற்றியும், ஐ.நா.வின் குழந்தை உரிமைகள் குறிப்பாகக் குழந்தை கொடுமை பற்றிய சரத்துகளைப் பற்றித் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. தொழில் முறை அமைப்புகளான துளிர் மற்றும் சைல்ட் லைன்(Child line) பற்றியும் அவற்றிடம் பெறக்கூடிய உதவிகள் பற்றிய தகவலும் அளிக்கப்பட்டது. ஆய்வில் பங்கு பெற்ற மாணவ மாணவிகள், அவர் தம் பெற்றோர்கள், அவர்கள் தரும் தகவல்கள்-முதலியன ரகசியமாக வைக்கப்பட்டது.
இதில் முக்கியமாய் கண்டெடுக்கப்பட்ட உண்மைகளாவன.
1. பங்கு பெற்றவர்களில் 42 சதவிகிதத்தினர் ஏதோ ஒரு வகையில் பாலியல் கொடுமைக்கு ஆளாகி இருக்கின்றனர்.
2. சமூகத்தின் எல்லா மட்டத்திலும் பாலியல் கொடுமைகள் நடக்கின்றன.
3. குழந்தைகள் பல வகைகளில் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்படுகின்றன. 1.குழந்தைகளின் அந்தரங்க உடல் உறுப்புகளை பார்த்தல், தொடுதல், அவர்களோடு உடலுறவுக் கொள்ளுதல். 2. அவர்களை வற்புறுத்தியோ ஏமாற்றியோ கிளர்ச்சியூட்டும் படங்களை பார்க்கச் செய்தல்.
4. பாலியல் குற்றமிழைப்பவர்கள் பெரும்பாலும் குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமான நபர்களாயும், அதிலும் அவர்கள் குடும்ப நபர்களாயும், அன்றாடம் சந்திக்கும் நபர்களாயும் இருக்கிறார்கள். குழந்தைக்கு நெருக்கமானவர்கள் எளிதில் அணுகி குழந்தையை நம்ப வைத்து பாலியல் கொடுமை செய்கின்றனர்.
5. 11 முதல் 15 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியர்கள் பாலியல் கொடுமையினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
குழந்தைகளைப் பாலியல் கொடுமைக்குள்ளாக்குவது அவர்களின் நிம்மதியைக் குலைத்தது, வளர்ந்த பின் மனோரீதியான பிரச்சினைகளை உருவாக்கும். குழந்தைகளைப் பேணிப் பாதுகாத்து வளர்ப்பது பெற்றோர்களின் பொறுப்பு.
ஆய்வில் கலந்து கொண்ட குழந்தைகளில் பலர் தங்களை பாலியல் கொடுமையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உதவி நடவடிக்கைகள் மற்றும் தகவல்கள் கேட்டிருந்தார்கள்.
அனைவருக்குமான உதவி மையமாய் செயல்படும் இவர்களின் முகவரி
துளிர் குழந்தை பாலியல் கொடுமைத் தடுப்பு மற்றம் குணமளிக்கும் மையம் 57, அ.எல். ப்ளாக் 26வது தெரு, அண்ணாநகர் கிழக்கு, சென்னை-102. தொலைபேசி-044 - 26632026.
|