முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  இன்றைய மங்கை  குழந்தை வளர்ப்பு
 
தாய்ப்பால்... ஒவ்வொரு குழந்தையின் பிறப்புரிமை
Webdunia
"தாயின் கடமை தாய்ப்பால் புகட்டுவது
சேயின் உரிமை தாய்ப்பால் அருந்துவது"

தாய்ப்பால் அளிப்பது நம் நாட்டில் தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கமாகும். சமூகத்தின் எந்தப் பொருளாதார வர்க்கத்தைச் சேர்ந்த பெண்ணாக இருப்பினும் குழந்தை பிறந்தபின் தாய்ப்பாலையே முக்கிய உணவாக அளிக்கிறாள்.

குழந்தைகளின் உரிமை

தாய்ப்பால் ஒவ்வொரு குழந்தையின் பிறப்புரிமை ஆகும். தாய்ப்பால் மிகச் சிறந்த பாதுகாப்பான, மலிவான, ஆரோக்கியமான, சத்து மிகுந்த குழந்தை உணவு என்பது இன்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் ஆறு மாத காலம், தாய்ப்பால் மட்டுமே அளிக்கப்பட வேண்டும். குழந்தை நலம் என்பது ஒரு குடும்பத்தின் பொறுப்பு மட்டும் அல்ல. அது நாடு முழுமையும் அக்கறை கொள்ள வேண்டிய கருத்தாகும்.

அமைப்பு ரீதியில்லாத தொழிற் பிரிவுகளிலுள்ள உழைக்கும் பெண்களின் நிலைமை

இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்கள் சரி பங்கு வகிக்கின்றனர். இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 48 சதவீதம் பெண்கள். 52 சதவீதம் ஆண்கள். சுமார் 92 விழுக்காடுகள் உழைக்கும் பெண்கள், அமைப்பு ரீதியில் இல்லாத தொழிற்பிரிவுகளில் வேலை செய்கின்றனர். தமிழ்நாட்டில் அமைப்பு ரீதியில் இல்லாத தொழிற் பிரிவுகளில் 57 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்கின்றனர்.

இவர்களில் ஏறத்தாழ 20 லட்சம் பேர் பச்சிளம் குழந்தைகளை வைத்திருப்பவர்கள். பாலூட்ட வேண்டிய பச்சிளம் குழந்தைகளை வீட்டிலேயே தவிக்க விட்டு, வருமானம் ஈட்ட வேண்டிய கட்டாயத்தில் இலட்சக்கணக்கான பெண்கள், அதுவும் வறுமைக் கோட்டுக்குக் கீழிருப்போர் உழல்கின்றனர். குடும்ப பராமரிப்பிற்காக பொருளீட்ட வேலைக்கு செல்வதா, அல்லது குழந்தைக்குப் பாலூட்ட வீட்டில் நிற்பதா? இது இவர்கள் முன்னே விசுவரூபம் எடுத்து நிற்கும் அடிப்படை கேள்வி.

இது ஒரு உழைக்கும் பெண்ணின் தனிப்பட்ட பிரச்சனை அல்ல. மாறிவரும் இன்றைய சமுதாயத்தில் இது பெண்களுக்கு ஏற்பட்டுள்ள ஒரு சமூகப் பிரச்சனையாகும். இப்பிரச்சனை தீர உழைக்கும் தாய்மார்களுக்கு அவர்கள் குடும்பம் மட்டுமே உதவி செய்தால் போதாது. சமுதாயத்தின் உதவி, அரசின் ஆதரவு, ஏற்பாடுகள், நடவடிக்கைகள் இதில் அத்தியாவசியப் பங்கு வகிக்க வேண்டும்.

குடும்பத்தாரின் பங்கு

தாய்ப்பால் கொடுக்கும்போது அத்தகைய தாய்மார்கள் குடும்பத்திலுள்ள பெரியவர்கள், மாமியார், நாத்தனார், கணவன் மற்றும் சுற்றத்தார் நன்கு ஊக்குவிக்க வேண்டும். பெண் உழைப்பாளிகள் சில மாத காலத்திற்காவது வேலைக்குப் போகாமல் வீட்டிலிருந்து ஓய்வெடுக்கவும் குழந்தையை கவனிக்க தேவையான ஆரோக்கியத்தைப் பெறவும் உதவ வேண்டும். குழந்தையைப் பேணுவது தாயின் பொறுப்பு மட்டுமல்ல, தந்தையின் பொறுப்பும் கூட. தனிக்குடித்தனத்தில் வாழும் பெண்களுக்கு வீட்டு வேலைகளிலும், மூத்த குழந்தைகளைப் பேணுவதில் கணவன்மார்கள் உறுதுணையாய் இருக்க வேண்டும். தேவைப்பட்டால் விடுப்பு எடுத்துக் கொண்டு மனைவிக்கு உதவுதல் ஒரு நல்ல முன் மாதிரியான செயல்பாடு ஆகும்.

சட்டம் என்ன சொல்கிறது?

தாய்ப்பாலுக்கு மாற்று உணவு, பாட்டில் உணவு மற்றும் பச்சிளங் குழந்தைகளுக்கான உணவு குறித்து 1992ம் வருடத்திய சட்டங்களின் கீழ் குழந்தை செயற்கை உணவுகளின் விற்பனையில் சட்டரீதியாக தடைகள் கொண்டு வந்துள்ளது. இதன்படி தாய்ப்பாலுக்கு மாற்று உணவு தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து எந்த வகையான உதவியும் (பரிசு பொருள், விளம்பரங்கள், பண உதவி முதலியன) மருத்துவர்களோ அல்லது செவிலியர் மற்றும் நலப்பணியாளர்களோ பெறக் கூடாது.

அரசின் உதவி

குழந்தைகள்பால் பிரிவு காட்டும் மருத்துவமனை திட்டம், ஊட்டச்சத்துத் திட்டம், குறைவான எடையுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை குறைப்பது போன்ற திட்டங்கள் தாய்மார்களுக்கு நேரடியாகச் சென்றடைகிறது.

மகப்பேறு உதவித் திட்டம்

தேசிய மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்குக் கிழ் உள்ள இரண்டு குழந்தைகளுக்கு மேற்படாமல் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு அவர்கள் வேலை செய்யாத நாட்களில் வரும் பண இழப்பை ஈடு செய்யும் விதமாக ரூபாய் 500 பிரசவத்திற்கு முன் அளிக்கப்படுகிறது. இதைப் பெற வேண்டுமானால் சமூக நலத்துறைச் சார்ந்த அதிகாரிகளை அணுக வேண்டும்.

தாய்மார்கள் என்ன செய்ய வேண்டும்?

குழந்தைக்கான செயற்கை உணவுகளைத் தாய்மார்கள் முதல் 6 மாதங்களுக்கு அறவே கொடுக்கக் கூடாது. குறைந்த பட்சம், முதல் இரண்டு வருடங்கள் வரை தாய்ப்பால் தொடர்ந்து கொடுத்திட வேண்டும்.

உழைக்கும் தாய்மார்கள் எவ்வாறு தாய்ப்பால் கொடுப்பது?

வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தங்களுக்கு கிடைக்கும் மருத்துவ விடுப்பில் முழுமையாக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை முக்கிய பணியாக கருத வேண்டும். குழந்தை அழும் போதெல்லாம் அதற்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

காலையில் வேலைக்குச் செல்லும் முன் எத்தனை தடவை தாய்ப்பால் கொடுக்க முடியுமோ அத்தனை தடவை கொடுக்க வேண்டும். அதற்கு முன் தாய்ப்பாலை தனியாக சுத்தமான கிண்ணத்தில் எடுத்து வைத்து வீட்டில் உள்ளோரிடம் அதனைக் குழந்தைக்கு முறைப்படி பாலாடை மூலம் கொடுக்கச் சொல்லிவிட்டுப் பணிக்குச் செல்லலாம்.

சாதாரண தட்பவெட்ப நிலையில் 12 மணி நேரம் வைத்திருந்தால் தாய்ப்பால் கெடாமல் இருக்கும்.

வேலையிலிருந்து வீட்டிற்குத் திரும்பிய உடன் மறுபடியும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை இரவு, பகல் பாராமல் தொடர வேண்டும். பால் புளித்திருக்கும், கொடுக்கக் கூடாது என்ற எண்ணம் அறவே தவறு.

பாலூட்ட முடியாமல் பரிதவிக்கும் உழைக்கும் தாய்மார்களையும் ஆறுதல் கூறி அரவணைத்து உதவ வேண்டும். குழந்தைக்குத் தாய்ப்பால் கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும். அதற்கு அனைவரும் உதவ வேண்டும்.

அமைப்பாளர் தமிழ்நாடு குழந்தைப் பராமரிப்பு
சேவைக்கானக் கூட்டமைப்பு (ஃபோர்ஸஸ்)
சென்னை - 600 034.
தொலைப்பேசி : 8175659
மேலும்
தாய்ப்பால் தரும் சக்தி
புட்டிப்பால் உணவு
குழந்தைகளுக்கு எப்போது எதைக் கொடுக்க வேண்டும்?
கங்காரு மதர் கேர்
தாய்ப்பால் சுரக்க
அழும் குழந்தைகள்