பிறந்த 28 நாட்களுக்குள் உள்ள குழந்தைகளை பச்சிளம் குழந்தைகள் என்று சொல்வார்கள். இந்த நாட்கள் தான் குழந்தைகளுக்கு அபாயகரமான நாட்கள் என்று சொல்ல வேண்டும். பல்வேறு நோய்க்கிருமிகள் குழந்தைகளைத் தாக்க தேடி வரும். அதனால் சுகாதாரத்துடன் குழந்தைகளைக் காக்க வேண்டியது ஒரு தாயின் மிகப் பெரிய கடமையாகும்.
மேலும் குறை மாதத்தில், குறைபாடுகளுடன் கூட குழந்தைகள் பிறக்கும். அதனால் டாக்டரின் தகுந்த ஆலோசனையை பெற வேண்டும். பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் என்ன? அதை எப்படி காப்பது? வராமல் எப்படி தடுப்பது?
இதோ சென்னை குழந்தைகள் நல மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் சரஸ்வதி விவரிக்கிறார்:-
பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் எடை குறைவாக தான் பிறக்கிறார்கள். பொதுவாக குழந்தைகள் 2.5 கிலோ எடையுடன் இருக்க வேண்டும். இது தான் சரியான எடை.. குறை மாத குழந்தைகள் பொதுவாக எடை குறைவாக தான் பிறக்கும். அதாவது 37 வாரத்திற்கும் 28 முதல் 36 வாரத்திற்குள் பிறக்கும் குழந்தைகள் குறை மாதக் குழந்தைகளாகும். இதன் எடையை கூட்டுவதற்கு தனியாக வைத்து பராமரிக்க வேண்டும்.
குழந்தையின் உடல் வெப்பம் குறைவாக இருப்பதால் தான் எடை குறையும். அதனால் வெப்பத்தை அதிகரிக்க இன்குபேட்டரில் குழந்தைகளை வைக்கலாம். குழந்தைகளின் உடம்பில் சர்க்கரை, கொழுப்பு சத்து குறைவாக இருந்தாலே எடை குறைவாக தான் இருக்கும். சத்து குறைவாக இருந்தால் கிருமிகள் தாக்கி எளிதில் ஆபத்து ஏற்படும். குழந்தையின் உடல் சூடு சீராக இருந்தால் தான் உட்கொள்ளும் ஆகாரம் எடை கூட உபயோகமாக இருக்கும். சீராக இல்லையென்றால் உட்கொள்ளும் ஆகாரத்தினால் எடையும் கூடாது, வளர்ச்சியும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
கங்காரு மதர் கேர் பகுதி
எல்லா மருத்துவமனைகளிலும் வாமர், இன்குபேட்டர் சாதனங்கள் இருக்க வாய்ப்பில்லை. நம் நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட பிரசவங்கள் கிராமங்களில் தான் நடக்கிறது. அங்கு போதுமான வசதிகள் இருப்பதில்லை. இந்த மாதிரியான இடங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோர்களே வீட்டிலிருந்து சிகிச்சையளித்து குழந்தையின் உடல் எடையை அதிகரிக்க முடியும்.
குழந்தையின் உடல் வெப்பம் தனியாமல் இருப்பதற்கும் வெப்பம் அதிகரிக்கவும் செய்ய எளிதான பயிற்சிகள் உள்ளன. அதாவது தாயின் மார்பு பகுதி குழந்தையின் மார்பு பகுதி படுமாறு இருவரின் உடலையும் சேர்த்து ஏதாவது ஒரு துணியால் கட்டி விட வேண்டும். இதற்கு பொதுவாக லைக்கிரான் எனப்படும் எலாஸ்டிக் உள்ள துணி தான் பயன்படுகிறது.
|