பெரும்பாலும் குளிர்காலத்தில் சருமம் வறண்டு காணப்படும். இதைத் தவிர்க்க பலர் எண்ணைகளையும், சில கிரீம்களையும் பயன்படுத்துவர்.
ஆனால் இயற்கை முறையில் நமது சருமத்தை குளிர்காலத்தில் பாதுகாக்க வேண்டியது அவசியம்.
முதலில் நமது உடலுக்குத் தேவையான அளவிற்கு நாம் தினமும் நீர் அருந்த வேண்டும். சுத்தமான நீரை போதுமான அளவில் தினமும் அருந்தி வந்தால் நமது உடலில் நோய்களுக்கு இடமே இல்லை. சருமமும் வறண்டு போகாது.
குளிர் காலங்களில் விட்டமின் ஏ மற்றும் சி நிறைந்த உணவுப் பொருட்களை நமது உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். மேலும், தானிய வகைககளை அதிகமாக உண்ண வேண்டும். இதனால் நமது சருமம் இளமையாக தோற்றமளிக்கும்.
குளிப்பதற்கு சில மணி நேரங்கள் முன்பு ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து முகம் மற்றும் வெயில் படும் உடல் பாகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து குளிப்பதால் சருமம் மிளிரும்.
இதையே தலைக்கும் பயன்படுத்தலாம். ஆனால் உடல் குளிர்ச்சி அடைந்துவிடும். எச்சரிக்கைத் தேவை.
நம் காலங்காலமாக செய்து வந்த எண்ணெய் குளியல் இந்த பருவ நிலைக்கு நல்ல பாதுகாப்பு அரண்.
சோப்புகளைத் தவிர்த்து பயத்தம் பருப்பு மாவு அல்லது கடலை மாவுகளை குளிக்கப் பயன்படுத்தினால் அதிக பலனை பெறலாம்.
இரவு நேரத்தில் நன்றாக தூங்க வேண்டும். இந்த ஓய்வு நமது சருமம் புத்துணர்ச்சி பெற ஏதுவாக இருக்கும் வகையில் அமையும்.
முறையான உடற்பயிற்சி அவசியம். கிடைக்கும் நேரத்தில் முறையான உடற்பயிற்சியை செய்வதன் மூலம் நமது செல்களுக்கு ரத்த ஓட்டம் கிடைக்கிறது. மேலும் ஆங்காங்கே கொழுப்பு தேங்குவதும் தவிர்க்கப்படும். ஆரோக்கியமே அழகின் அடிப்படையாகும்.
இந்த பருவ நிலையில் பொறித்த உணவுப் பொருட்களை தவிர்ப்பது நல்லது. அதிக அளவில் சர்க்கரை, சாகலேட், கா·பின் போன்றவற்றை தவிர்ப்பதும் நலம்.
தட்பவெப்பத்தை உடனுக்குடன் மாற்றுவதை தவிர்க்கவும். வெப்ப நிலை அதிகமான பகுதியில் இருந்து ஏசி இருக்கும் அறைக்கு உடனடியாக செல்லும்போது நமது உடலின் தட்பவெப்பநிலை பாதிக்கப்படுகிறது. இதை தவிர்க்கவும்.
மிகச் சூடான வெந்நீரில் குளிப்பதையும், கடினமான சோப்புகளை பயன்படுத்துவதையும் தவிர்க்கவும்.
துணி துவைக்கவும் மென் சோப்புகளைப் பயன்படுத்தவும். இது கைககளை வறட்சியாக்குவதில் இருந்து தவிர்க்கும்.
அதிகாலையிலோ, இரவு நேரத்திலோ வெளியே செல்லும்போது உங்கள் சருமத்திற்கு ஏற்ற இயற்கையான க்ரீம்களை பயன்படுத்துங்கள். அது உங்கள் சருமத்தை வறட்சியாகாமல் காக்கும்.
ஆனால் எப்போதும் சருமத்தை ஏதாவது ஒரு க்ரீம்களை தடவி மூடியே வைக்காதீர்கள். அது சருமத்தின் இயற்கைத் தன்மையை பாதிக்கும்.
|