முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  இன்றைய மங்கை  பேஷன்
 
தெரிந்து கொள்ளுங்கள் - நடைமுறை நாகரீகங்கள்
Webdunia
நடைமுறை நாகரீகம் என்பது முக்கியமாய் பொது இடங்களிலும் விருந்தினர்களிடமும் பிறர் முன்னிலையில் நாம் நடந்து கொள்ளும் முறையாகும். நம்மை அறியாமலேயே நாம் இம்மாதிரியான நேரங்களில் ஏடாகூடமாக நடந்து கொண்டு பின்னர் அசடு வழிவதை தவிர்க்க ஒருசில நாகரிக நடைமுறைகளை தெரிந்து கொள்ளுவோம்...

நால்வர் நாடும் பொது இடத்தில் பிறருடன் நாம் உரக்கப் பேசுவது நாகரீகமானதல்ல. மற்றவர் பார்வை நம் மேல் பதியும் படி கண்ணை உறுத்தும் உடை அணிவது அநாகரீகமானது. பொது இடத்தில் உரக்கச் சிரிப்பது மற்றவர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கும்.

நமக்குத் தெரிந்ததையே பேசிக் கொண்டு மற்றவர்களின் வாயை அடைக்க வைப்பதும், நமது பிரச்சினைகளையே புலம்புவதும் பிறருக்கு விருப்பமில்லாத சூழ்நிலையை ஏற்படுத்தும்.

விருந்தினர் முன்னிலையில் நாம் ரகசியம் பேசுவதைப் போல் நம் வீட்டினரோடு காதோடு விஷயங்கள் பேசுவது தவறு... அப்படி மிகவும் முக்கியமாக இருப்பின் தனியே போய் பேசுவதே நலம்.

ஒருவர் வீட்டிற்கு விருந்தினராக செல்லும் இடத்தில் தன் வீட்டையும் அவர்கள் வீட்டையும் ஒப்பிட்டுப் பார்த்தல் ரசிக்கத் தக்கதல்ல... அதுவும் தன் வீடு உசந்தது என்ற ரீதியில் பேசுவது மேலும் அ நாகரிகம்.

பொது இடத்தில் பல் குத்துவது, காது குடைவது, அங்க சேஷ்டை செய்வது தவறானது.

தும்மல் வந்தாலும் கர்சீப்பால் வாயை மூடிக் கொண்டு முகம் திருப்பி தும்முதல் நலம். நோய்க்கிருமிகள் இதனால் பரவாது.

பொது இடத்தில் நடைபெறும் விருந்துகளில் அரக்க பரக்க உண்ணாமல் நிதானமாய் நாகரீகமாய் சாப்பிடத் தெரிந்திருக்க வேண்டும்.

தண்ணீர் மற்றும் குளிர் பானங்களை தொண்டைக் குழியில் "மடக் மடக்" என ஒலி வரும் அளவிற்கு குடிக்கக் கூடாது.

தியேட்டர், கோவில் போன்ற இடங்களுக்குப் பெண்கள் அதிக நகை அணியாமல் வருவது நல்லது.

நாம் தூய்மையான, சுத்தமான உடை அணிதலும், பொது இடத்தையும் நாம் சுத்தமாக வைத்துக் கொள்வதும் அவசியம். குப்பைகளை பொது இடத்துக் குப்பைத் தொட்டிகளில் சேர்த்து விட வேண்டும்.