ஒரு தாய் தனது குழந்தையை அதிக அக்கறையுடன் பராமரித்து வளர்த்து வருவது இயல்பு. கல்வி, கலை, நடை, உடைகளில் அதிக கவனம் செலுத்தி அவர்களுக்கு தேவையானவற்றை செய்கிறார்கள்.
ஆனால், அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்களை சொல்லிக் கொடுக்கிறார்களா என்பதுதான் கேள்விக்குறி.
நவ நாகரீக உலகில், படித்த தாய்மார்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டாலே அவர்கள் என்ன சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று நம்மையே கேட்கிறார்கள்.
webdunia photo
WD
டீன் ஏஜ் பருவத்தை நெருங்கும் பெண்களுக்கும், டீன் ஏஜ் வயதை நெருங்கிய பெண்களுக்கும் தாய்மார்கள் பல அறிவுரைகளை அவ்வப்போது அளித்து அவர்களது மனோ தைரியத்தை வளர்க்க உதவ வேண்டும்.
வெளிப்படையாக பேச வேண்டும்
பெண்கள் தங்களது பிள்ளைகளிடம் சில விஷயங்களை வெளிப்படையாக பேச வேண்டும். டீன் ஏஜ் வயதில் எதிர்பாலருடன் ஒரு வித ஈர்ப்பு வருவது இயற்கை. ஆனால் அதில் எந்த ஈடுபடும் காட்டாமல் நம் வழியில் செல்ல வேண்டும். அதற்கு அதிக முக்கியத்துவம் காட்டும்போதுதான் கல்வி பாதித்து வாழ்க்கையே வீணாகிறது என்று வெளிப்படையாகவேக் கூற வேண்டும்.
மறுக்க கற்றுக் கொடுங்கள்
பல விஷயங்களை பெண் பிள்ளைகள் மறுக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். உன்னிடம் யாராவது வந்து காதல் செய்வதாகக் கூறினாலோ, நீ இல்லாவிட்டால் நான் இல்லை என்று காதல் வசனம் புரிந்தாலோ, உறுதியாக மறுப்புத் தெரிவிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.
ஆனால் அந்த மறுப்பு எந்த விதத்திலும் வன்முறையாக இருக்கக் கூடாது. யதார்த்தமாக, நிதானமாக அணுகி மறுப்புத் தெரிவிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்.
நட்பின் வட்டம்
நட்பு என்பது ஒரு வட்டம். அதற்குள் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். நட்பு என்று சொல்லிக் கொண்டு தவறான செயல்களில் ஈடுபடுவது தவறு. நட்பு நட்பாக மட்டுமே இருக்க வேண்டும். அந்த நட்பும் கல்வி ரீதியாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துங்கள்.
தவறான நட்பாக இருந்தால் உடனடியாக அதை எடுத்துச் சொல்லி நல்ல விதமாக பிரிந்து செல்ல வழி ஏற்படுத்துங்கள். எந்த வகையிலும் குழந்தைகளை மிரட்டவோ, திட்டவோ செய்யாதீர்கள்.