பெண்களே தண்ணீர் என்றதும், ஏதோ அடுத்தாண்டு வரப்போகும் தண்ணீர் பற்றாக்குறைப் பற்றிப் பேசப் போகின்றீர்களா என்று கேட்காதீர்கள்.இது தற்போது நடைமுறையில் இருக்கும் பற்றாக்குறை. அதாவது பெண்களின் உடலில் இருக்கும் நீர் பற்றாக்குறை பற்றியதுதான் இந்த கட்டுரை.பொதுவாக வேலைக்குப் போகும் பெண்கள் தான் உணவை சரியாக சாப்பிட மாட்டார்கள். உடலை கவனிக்க மாட்டார்கள் என்று சொல்வார்கள். ஆனால் உண்மை அவ்வாறு இருப்பதில்லை. வேலைக்குப் போகும் பெண்கள் (பெரும்பாலும்) நேரத்திற்கு சாப்பிட்டுவிடுவார்கள். அது எவ்வளவு என்பது வேறு கதை. எதையாவது கொரித்தாவது வைப்பார்கள். காலையில் அவசரமாக வேலைக்குப் போகும் போது கிடைப்பதை வாயில் போட்டுக் கொண்டு ஓடுபவர்களும் உண்டு, ரயிலில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொள்பவர்களும் உண்டு. எதுவுமே முடியாதவர்கள் கடையில் பழச்சாறு அருந்திவிட்டாவது அலுவலகத்திற்குள் ஓடி மறைந்துவிடுவார்கள். மதிய வேளையில் எல்லோரும் சாப்பிடப் போகும்போது தானும் சாப்பிடுவார்கள். இரவு நிச்சயமாக ஏதாவது ஒன்றை சமைத்து குடும்பத்துடன் சாப்பிட்டுவிடுவார்கள்.ஆனால், இதில் வீட்டில் இருப்பவர்கள்தான் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவர்கள்.வீட்டில் இருக்கும் பெண்களில் (குடும்பத் தலைவி) பெரும்பாலானோர் காலை உணவை சாப்பிடுவதே இல்லை. சாப்பிட்டுவிட்டால் வீட்டு வேலைகளை செய்ய முடியாது என்று தட்டிக் கழிப்பவர்கள் ஏராளம். சாப்பாடே இந்த அளவிற்கு என்றால் தண்ணீர் பற்றிச் சொல்லவே வேண்டாம். சாப்பிடும் போதுதான் ஒரு டம்ளரோ அல்லது ஒரு சொம்புத் தண்ணியையோ குடிக்கிறார்கள். மற்ற சமயங்களில் அவர்களாகச் சென்று தண்ணீர் எடுத்துக் குடிப்பது அரிதாகிறது.வெளியில் செல்லும் நபர்களை விட, வீட்டில் இருப்பவர்கள் குடிக்கும் தண்ணீரின் அளவு மிகவும் குறைவாக உள்ளது. இது உண்மை என்பதை யாரும் மறுக்க முடியாது.வீட்டில் இருக்கும் பெண்களின் உடல் நலம் பெரும்பாலும் கெடுவதற்கு தண்ணீர் பற்றாக்குறையேக் காரணமாக அமைகிறது.வீட்டில் இருக்கும்போது வேலை வேலை, வேலை முடிந்ததும் பெரும்பாலும் டிவி நிகழ்ச்சிகள், அது முடிந்ததும் குழந்தைகள், மீண்டும் உணவு சமைத்தல் போன்றவற்றிலேயே அவர்கள் காலம் கழிக்கிறார்கள். அப்படியே நேரம் கிடைத்தாலும் மற்றவர்களுடன் கலந்துரையாடவே அவர்கள் நேரம் சரியாக இருக்கிறதே தவிர, தண்ணீர் குடிப்பது, உடலுக்குத் தேவையானதை செய்வது போன்றவை குறைவுதான்.எனவே, உங்கள் வீட்டுப் பெண்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறார்களா என்பதை நீங்கள் உறுதி செய்யுங்கள்.உங்கள் குடும்பத் தலைவியை சாப்பிட்டீர்களா என்று தொலைபேசியில் அழைத்துக் கேட்கும் ஒருவராக இருந்தால், அடுத்த முறை காலையில் இருந்து எவ்வளவு தண்ணீர் குடித்தீர்கள் என்றும் கேட்டுப் பாருங்கள். நாங்கள் சொல்வது உண்மை என்று புரியும். |