கணினி கல்வி நிலையத்தில் தன்னிடம் பயிலும் 35க்கும் மேற்பட்ட மாணவிகளை காதலிப்பதாகக் கூறி பாலியல் உறவு வைத்துக் கொண்டுள்ள கணினி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவிகளுடன் பாலியல் உறவு கொள்ளும் காட்சிகளை ரகசியமாக படம் பிடித்து தனது மடிக் கணினி (லேப் டாப்)யில் வைத்திருந்ததால் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா இடைக்கோடு அருகே உள்ள ராமவர்மன்சிறையைச் சேர்ந்தவர் கிருஷ்ண குமார் (வயது 28). எம்.சி.ஏ. படித்து முடித்த இவர், திருவனந்தபுரம் மாவட்ட உதியன்குளங்கரையில் உள்ள ஒரு தனியார் கணினி கல்வி நிலையத்தில் ஆசிரியராக சேர்ந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது மடிக் கணினி பழுதானதை அடுத்து பழுது நீக்குவதற்காக ஒரு கணினி பழுது நீக்கும் மையத்தில் கொடுத்தார்.
பழுது நீக்கியப் பின் கணினி பொறியாளர்கள் மடிக் கணினியில், கிருஷ்ணகுமார், பல மாணவிகளுடன் பாலுறவு கொள்ளும் காட்சிகள் பதிவு செய்து வைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்தனர். இது குறித்து காவல்துறைக்கும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கணினியை வாங்க வந்த கிருஷ்ணகுமாரிடம் மடிக் கணினி வழங்கப்பட்டது.
உடனடியாக விரைந்த காவல்துறையினர், பழுது நீக்கப்பட்ட கணினியுடன் தனது காரில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த கிருஷ்ணகுமாரை வழிமறித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து மடிக் கணினி, ஆபாச பேழைகள் (சி.டி.), கேமிரா போன்றவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகுமாரிடம் நடத்திய விசாரணையில், கிருஷ்ணகுமார் தன்னிடம் படித்த மாணவிகள் பலரை காதல் வலையில் வீழ்த்தி, அவர்களை விடுதிகளுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருப்பதும், அதனை கேமிரா மூலம் ரகசியமாக படம் பிடித்தும் உள்ளார்.
இதை சி.டி. கேசட்டுகளாக மாற்றி விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது. 35-க்கும் மேற்பட்ட மாணவிகளை கிருஷ்ணகுமார் ஆபாச படம் எடுத்து வைத்திருப்பதாக தெரிகிறது. மேலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பெண்களே... இந்த தகவல் எதற்காகத் தெரியுமா? கல்வி எனும் வாழ்க்கைக்கான அடிப்படையைய் கற்கச் செல்லும் இடத்தில் வாழ்க்கையின் அஸ்திவாரத்தையே இழந்து விடக் கூடாது என்று அறிவுறுத்தவே.
பெற்றோர்கள் எப்போதும் உங்களை கண்காணிக்கின்றார்கள் என்றோ, உங்களை கட்டுப்படுத்துகிறார்கள் என்றோ நீங்கள் குறைபட்டுக் கொள்ளலாம். ஆனால், அது உங்கள் மீதான பயம் அல்ல... இதுபோன்றவர்கள் மீதான பயம்தான். எனவே உங்களது வாழ்க்கைப் பயணம் சீராக இருக்க வேண்டும் என்றால், நீங்கள் முதலில் சரியாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.
|