எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட கணவன், தன்னுடன் பாலுறவுக் கொள்ள மறுத்த மனைவி மீது ஆசிட் வீசிய படுபாதக செயல் ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள நிஜாம் பட்டணம் பகுதியை சேர்ந்தவர் ராம்பாபு என்ற விவசாயியின் மனைவி பசவசங்கரி. இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது, ஆனால் குழந்தைகள் இல்லை. ராம்பாபுவுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ராம்பாபுவும், பசவசங்கரியும் ரத்த பரிசோதனை செய்துள்ளனர். பரிசோதனையில், ராம்பாபுவுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது தெரிய வந்தது. பசவசங்கரிக்கு இந்த நோய் தாக்கவில்லை. இதன் பிறகு கணவர் தன்னுடன் தாம்பத்ய உறவு வைத்துக் கொள்ள பசவசங்கரி அனுமதிக்கவில்லை.
சில நாட்களுக்கு முன்பு ராம்பாபு, தன்னுடன் பாலுறவு கொள்ள பசவசங்கரி வற்புறுத்தியுள்ளார். அதற்கு பசவசங்கரி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராம்பாபு, கடந்த 13ம் தேதி இரவு வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த பசவசங்கரி மீது ஆசிடை ஊற்றியுள்ளார். இதில் பசவசங்கரியின் முகம், மார்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு அலறினார்.
இதற்குள் ராம்பாபு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். அலறலைக் கேட்டு அங்கிருந்தவர்கள் விரைந்து வந்த பசவசங்கரியை குண்டூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து குண்டூர் காவல்நிலையத்தில் பசவசங்கரி புகார் செய்தார். அதன் பேரில் ராம்பாபுவை நேற்று முன்தினம் காவல்துறையினர் கைது செய்தனர். |