உயிரிழந்துவிட்டதாகக் கூறி ஓய்வூதியம் பெற்றுக் கொண்டு வெளிநாட்டில் வேலை செய்து வந்த ஹெர்மன ஹெஸ்டர் என்ற ரயில்வே ஊழியர், அவரது மனைவியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்தவர் ஹெர்மன் ஹெஸ்டர். இவர் சென்னையில் உள்ள ரயில்வே அலுவலகத்தில் கடைநிலை ஊழியராக பணியாற்றினார். கடந்த 1983-ம் ஆண்டு திடீரென காணாமல் போய்விட்டார். வேலைக்கும் செல்லவில்லை. இவரது மனைவி பார்பரா தனது கணவரைக் காணவில்லை என்று ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். காவல்துறையினரும், வழக்கு பதிவு செய்து ஹெர்மன் ஹெஸ்டரை தேடினார்கள். கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், கண்டுபிடிக்க முடியவில்லை என்று சான்றிதழ் கொடுத்து காவல்துறையினர் வழக்கை முடித்துவிட்டனர்.
7 ஆண்டுகள் ஒருவர் காணாமல் போய் வேலைக்கும் வராவிட்டால் அவரை இறந்ததாக கருதி ரயில்வே நிர்வாகம் குடும்ப ஓய்வூதியம் வழங்கிவிடுவது வழக்கம். இதைப் பயன்படுத்தி ஹெர்மன் ஹெஸ்டரின் மனைவி பார்பரா கணவர் இறந்து விட்டதாக சொல்லி மாதம் ரூ.5000 குடும்ப ஓய்வூதியம் கடந்த 26 ஆண்டுகளாக வாங்கிவந்தாராம்.
இந்த நிலையில் சமீபத்தில் ஹெர்மன் ஹெஸ்டர் இறக்கவில்லை என்றும், அவர் உயிருடன் இருப்பதாகவும் குவைத்தில் வேலை பார்ப்பதாகவும் ரெயில்வே நிர்வாகத்துக்கு தெரிய வந்தது. உண்மை வெளிவராமல் இருக்க ஹெர்மன் ஹெஸ்டரின் மனைவி நுங்கம்பாக்கத்தை காலிசெய்துவிட்டு பள்ளிக்கரணையில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இறந்து போனதாகக் கருதப்படும் ஹெர்மன் ஹெஸ்டரும் குவைத்தில் இருந்து அடிக்கடி வந்து குடும்பத்தைப் பார்த்துச்சென்று வந்துள்ளார். அவருடைய மகளையும் திருமணம் செய்து கொடுத்து உள்ளார்.
உண்மை வெளிச்சத்துக்கு வந்ததால் கொதித்துப்போன ரெயில்வே நிர்வாகம் இது தொடர்பாக, மத்தியப் புலனாய்வுக் கழகத்திடம் புகார் கொடுத்தது. 26 ஆண்டுகளாக ரெயில்வே நிர்வாகத்தை ஏமாற்றி ஓய்வூதியம் வாங்கிய ஹெர்மன் ஹெஸ்டர் மீதும், அவரது மனைவி பார்பரா மீதும் வழக்கு பதிவு செய்தனர். நேற்று அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
இதுபோல், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோர் நிர்வாகத்தை ஏமாற்றி பணம் சம்பாதித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீதும், அவர்கள் குடும்பத்தார் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய புலனாய்வுக் கழகம் எச்சரித்து உள்ளனர். இவ்வாறு ஏமாற்று வித்தை காட்டுபவர்கள் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ளார்களா? என்றும், மத்திய புலனாய்வுக் கழகம் விசாரித்து வருகிறது.
|