குடும்பத்தின் வளர்ச்சிக்கும், வாழ்விற்கும் உறுதுணையாக இருந்த அன்னைகளுடன், இந்த நாட்டிற்காகவும், சமூகத்திற்காகவும் போராடிய அன்னையர்களும் இந்த தினத்தில் நினைவில் கொள்ளத்தக்கவர்கள்.
அப்படி எடுத்துக் கொண்டால் ஏராளமான நிழற்படங்கள் நம் கண் முன் நிழலாடும். அவர்களைப் பற்றிய ஒரு சிறு குறிப்புதான் இங்கு உங்களுக்காக.
நாகம்மையார்
இவர் பெரியாரின் மனைவி. பெரியாருடன் சேர்ந்து கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு சிறை சென்றார். விடுதலை போராட்டத்திலும் அதிக ஈடுபாடு காட்டினார்.
கஸ்தூரிபா காந்தி
கணவர் வழியில் சென்று தேசத்திற்காகப் போராடியவர். 1904 முதல் 1914ஆம் ஆண்டு வரை தென் ஆப்ரிக்காவில் தனது கணவருடன் வாழ்ந்த காலத்தில்தான் கஸ்தூரிபாவின் சமுதாய அக்கறை வெளிப்பட்டது.
அன்றைய காலக்கட்டத்தில் தென்ஆப்ரிக்காவில் பணியாற்றிய இந்தியர்களின் நிலைமையைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட கஸ்தூரிபா கைது செய்யப்பட்டு 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு கடுமையாக பணியாற்றும் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் முழு மூச்சில் இந்திய விடுதலைக்காகப் போராடிய கஸ்தூரிபா, எப்போதெல்லாம் காந்தி சிறையில் அடைக்கப்பட்டாரோ அப்போதெல்லாம் அவரது இடத்தில் இருந்து போராட்டங்களுக்குத் தலைமைதாங்கினார்.
|