பக்கத்துத் தெருவில் இருக்கும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்கவே, அய்யோ அந்த வரிசையில் நின்று யார் வாக்களிப்பது என்று சலித்துக் கொள்ளும் உலகத்தில் 600 கி.மீ. தூரம் காடு மலை முகடுகளில் ஏறி இறங்கி நடந்து சென்று வாக்களித்துள்ளார் ஒரு குடிமகள்.
இமாலயத்தை ஒட்டி உள்ள பூட்டானில்தான் அந்த உலகமகா குடிமகள் 65 வயதான ஷேவாங்க டேமா என்பவர் வசித்து வருகிறார்.
பூட்டானில் தற்போது மன்னர் ஆட்சி நடைபெறுகிறது. ஜனநாயகம் எனப்படும் மக்களாட்சி மலர உள்ளது. அதற்காக கடந்த திங்கட்கிழமை அன்று முதன் முதலாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த வாக்குப்பதிவில் பூட்டான் மக்கள் அனைவரும் அவர்கள் பிறந்த இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடிகளில் மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பல மலைவாழ் கிராமங்களும் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே எங்கெங்கோ வாழும் பூட்டான் மக்கள் தங்கள் பிறந்த ஊர்களுக்குச் செல்ல ஆயத்தமானார்கள். வண்டிகளையும், டிரக்குகளையும் கட்டிக் கொண்டு வாக்களிக்க கூட்டம் கூட்டமாகக் கிளம்பினர்.
ஆனால், ஷேவாங் டேமாவிற்கு வாகனத்தில் சென்றால் தலை சுத்தல், வாந்தி எடுக்கும் பிரச்சினை இருப்பதால் அவர் ஒரு முடிவை எடுத்தார்.
நான் வாக்களித்து என்ன ஆகப்போகிறது என்பதல்ல, தான் பிறந்த கிராமத்திற்கு 600 கி.மீ. தூரம் நடந்தே சென்று வாக்களித்துவிட்டு வருவதென்பதுதான் அந்த முடிவு.
பூடானின் தலைநகர் திம்புவில் வசிக்கும் டேமா, வீட்டில் இருந்து வாக்களிப்பதற்காக தான் பிறந்த கிராமத்திற்கு நடந்தே செல்வதாக கூறியவுடன் உறவினர்கள், சுற்றத்தார் என எல்லோருக்கும் அதிர்ச்சி. ஆனால் விடாப்பிடியாக ஜனநாயக ஆட்சி மலர தான் வாக்களித்தே ஆக வேண்டும் என்ற டேமாவின் உறுதியான முடிவினால், வேறு வழியில்லாமல் அனைவரும் மிகுந்த வருத்தத்துடன் அவரை வழியனுப்பி வைத்தனர். பல ஆண்டுகள் கழித்து வீட்டை விட்டு வெளியே செல்லும் டேமா தனது 13 வயது பேரனுடன் பயணத்தைத் துவக்கினார்.
பகல் முழுவதும் அந்த கரடு முரடான பாதைகளில் நடந்து செல்வதும், இரவு நேரத்தில் ஆங்காங்கே இருக்கும் கிராமங்களில் தங்கிவிடுவதுமாக இந்த பயணம் அமைந்தது.
டேமா நடந்து வந்த பாதைகள் அனைத்தும் அழகான சாலைகள் அல்ல, கரடுமுரடான பாறைகளையும், முட்களையும் கொண்ட மலைப்பாதை.
சுமார் 14 நாட்கள் மிகுந்த மன உறுதியுடன் நடந்து வந்து, அவர் பிறந்த கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார் பூட்டான் குடிமகள் ஷேவாங்க டேமா.
ஷேவாங் டேமா மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான மக்கள் பல ஆண்டுகள் கழித்து தங்கள் சொந்த மண்ணைக் காண மன உற்சாகத்துடன் வந்திருந்தனர்.
6 லட்சத்து 70,000 மக்களைக் கொண்ட நாட்டின் தேர்தல் ஆணையம், வாக்களிக்க வரும் பொதுமக்களின் வசதிக்காக தனியார் மற்றும் சொந்த வாகனங்களை வாக்குச்சாவடிகளை நோக்கி இயக்கவும், வாடகை கார்களை இயக்கவும் அனுமதித்தது. பலர் பல ஆண்டு கழித்து கிடைத்த வாகனத்தில் தங்கள் பிறந்த கிராமத்தை தரிசிக்கவும், வாக்களிக்கவும் புறப்பட்டனர்.
வாக்குப்பதிவன்று எப்போதும் மக்கள், வாகன நெரிசலில் சிக்கித் தவிக்கும் பூடான் தலைநகர் திம்புவில் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. உணவகங்களும் சிறிது நேரம் மட்டுமே இயங்கின. திம்புவில் வசிக்கும் அனைவரும் வாக்களித்து தங்கள் கடமையை நிறைவேற்ற அவர்களின் பிறந்த மண்ணுக்கு சென்று விட்டனர்.
அலுவலகம் விடுமுறை அளித்தும், பக்கத்துத் தெருவில் வாக்குச்சாவடி அமைத்தும் வாக்களிக்கப் போகாமல் இருக்கும் பொறுப்பற்ற குடிமக்களே இவர்களைப் பார்த்தாவது திருந்துங்கள். உங்கள் வாக்கின் சக்தி என்ன என்று உணருங்கள்.
ஷேவாங்க டேமா வுக்கு “ உலக ஜனநாயக நாயகி” என்ற பட்டத்தை கொடுத்தாலும், அவரின் கடின முயற்சிக்கு ஈடு இணையாகாது.
இது குறித்து நீங்கள் என்ன கூறப்போகின்றீர்கள்?
|