'11 வயது பெண் குழந்தையை 5 ரூபாய்க்கு 60 வயது முதியவருக்கு விற்கும் நிலைதான் இன்றளவும் நீடிக்கிறது. இந்த நிலையில் சட்ட அதிகாரங்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்' என்று மனித வள மேம்பாட்டுத்துறை மத்திய இணை அமைச்சர் புரன்தரேஷ்வரி பேசினார்.
டெல்லியில் உள்ள கேந்திரிய வித்யாலாயாவில் நடந்த சர்வதேச மகளிர் தின விழாவில் பங்கேற்ற அமைச்சர், இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும், இந்திய பெண்கள் சம உரிமைக்காக போராடும் நிலை குறித்து பேசினார்.
அப்போது, 'ஆண்களுக்கு அளிக்கப்படும் சமூக, பொருளாதார, அரசியல் வாய்ப்புகளும் சமமாக பெண்களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசியலமைப்பு கூறுகிறது. ஆனால், வீட்டிலேயே குறிப்பாக சமயலறையிலேயே பெண்கள் முடக்கப்படுகின்றனர். அதில் அனைத்து நல்ல சட்டங்களும் மறக்கடிக்கப்படுகின்றன. மனித தன்மையற்ற செயலுக்கு பெண்கள் ஆளாகி வருகின்றனர். வரதட்சணைக்கு பயந்து 11 வயது சிறுமியை பெற்றோரே 60 வயது கிழவருக்கு விற்ற செய்தியை பத்திரிக்கை ஒன்றில் படித்தேன். இந்த நிகழ்வு இதயத்தையே உலுக்குகிறது' என்றார்.
பேச்சாளர் பூபின்தர் சிங், 'பெண் தனது வாழ்நாள் முழுவதும் மனித சமூகத்திற்கு சக்தியை வழங்குபவராக இருக்கிறார் என்பதை மறந்து விடுகிறோம். அனைத்து செயல்பாடுகளிலும் முக்கிய பங்கு வகிக்கும் பெண்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும்' என்று பேசினார்.
தொடர்ந்து விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் புரந்தேஷ்வரி பரிசுகள் வழங்கினார்.
|