நமது நாட்டில் செவிலியர், நோயாளி விகிதாச்சாரம் பற்றாக்குறையாகவும், சமச்சீரற்ற நிலையிலுமே உள்ளது. 2,250 பேருக்கு ஒரு செவிலியர் என்ற நிலைதான் தற்போது உள்ளது. இதனை மாற்ற சுமார் 2 லட்சம் செவிலியர்கள் அடுத்து வரும் ஆண்டுகளில் நியமிக்கப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
வளர்ந்த நாடுகளில் 150 முதல் 200 பேருக்கு ஒரு செவிலியர் பணியாற்றும் நிலை உள்ளது. இந்தோனேஷியா, கென்யா, இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகளில் கூட செவிலியர் - மக்கள் விகிதாச்சாரம் சிறந்த நிலையில் உள்ளது. வரும் 22 ஆம் தேதி பயிற்சி பெற்ற செவிலியர்கள் இந்திய கூட்டமைப்பின் நூற்றாண்டு விழாவையொட்டி வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் மக்கள் - செவிலியர் விகிதாச்சாரம் 1: 5, 1: 60, 1: 1000 என பல்வேறு நிலைகளில் இருப்பது தெரிய வந்துள்ளது.
தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த மருத்துவ சேவையை வழங்க குறைந்த பட்சம் பயிற்சி பெற்ற 2 லட்சம் செவிலியர்கள் தேவை என்று இந்திய பயிற்சி பெற்ற செவிலியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நோயாளிகளுக்கு தரமான மருத்துவ சேவையை வழங்க, மருத்துவ உதவியாளர்கள், பட்டம் பெற்ற செவிலியர்களை அதிக அளவில் உருவாக்க கூடுதல் செவிலியர் பயிற்சி மையங்களை மாநில அரசுகள் உருவாக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசு வலியறுத்தியள்ளது.
பள்ளி, கல்லூரி இல்லாத மாவட்டங்களில் செவிலியல் பட்டப் படிப்பு, ஆரம்ப நிலை செவிலியர் உதவியாளர் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. 11 வது திட்டக் காலத்தில் செவிலியர்களை, முறையாக தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதில் ஈடுபடுத்தும் வகையில் ஒரு பதிவுத் திட்டத்தையும் அரசு தொடங்க உள்ளது.
மண்டல அளவிலான சிறப்பு செவிலியர் பயிற்சி மையம் ஒன்றை அனைத்து மண்டலங்களிலும் அமைத்து, அந்த மண்டலத்திற்கு உட்பட்ட மருத்துவமனைகளில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் செவிலியர்களுக்கு பணிக் காலத்திலேயே பல சிறப்பு பயிற்சிகளை வழங்கவும் திட்மிட்டுள்ளது.
கடந்த 1908 ஆம் ஆண்டு கூடிய பயிற்சி பெற்ற மருத்துவ செவிலியர்கள், தங்களுக்கென்று ஒரு கூட்டமைப்பை உருவாக்கினார்கள். அதோடு செவிலியர்களின் மரியாதை, சமுக அந்தஸ்த்து, செவிலியர் பணிக்கு உரிய மகத்துவத்தை சமுதாயத்தில் பெறவும் தேவையான நடவடிக்கைகளை பெற அனைத்து வழிகளிலும் முயற்சிப்பது என்ற இலக்குடன் களம் இறங்கி இன்று வெற்றியும் பெற்றுள்ளனர். நாட்டில் உள்ள அனைத்து செவிலியர்களின் பணித் திறன், கல்வித் திறன், பொதுவான நலன்கள் என அனைத்து தரப்பு முன்னேற்றத்திற்கும் இந்த அமைப்ப அரும் பணியாற்றியுள்ளது. இந்த அமைப்பின் நூற்றாண்டு விழா வரும் 22 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
மேற்கத்திய நாடுகளைப் பொறுத்த மட்டில் செவிலியர்கள், மயக்க மருந்து கொடுக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளனர், மேலும் சிறிய அறுவை சிகிச்சைகளின் முக்கிய பணிகள் இவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிற நோயாளிகளுடன், புதிதாக பிறக்கும் குழந்தைகளைப் பேணும் பொறுப்பும் செவிலியர்களையேசாரும். மருத்துவக் குழவை பொறுத்த வகையில் உரிய பொறுப்புகளுடன் செவிலியர்கள் முக்கியமானவர்களாக திகழ்கின்றனர்.
இன்று பல சிறப்பு கவன பிரிவுகள், சோதனை மையங்கள், இரத்த வங்கிகள் என மருத்துவ துறையின் பெரும்பாலான அமைப்புகள் செவிலியர்களின் கட்டுப்பாட்டில் சிறப்பாக இயங்கி வருகின்றன. செவிலியர் பணிகளில் அவர்களுக்கு உதவி புரயும் ஆரம்ப நிலை ஊழியர்கள் ( மருத்துவச்சிகள் ) நோயாளிகளுக்கு ஆற்றும் பணி உண்மையிலேயே அளப்பறியது. அவர்களுக்கு உரிய மரியாதையையும், கமூக பாதுகாப்பையும் வழங்குவதோடு, செவிலியர் பணியில் அவர்களின் திறனை குறைத்து மதிப்பிடாமல் ஊக்கப்படுத்த வேண்டும். "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்". அந்த குறைவற்ற செல்வத்தை நமக்கு பெற்றுத் தர தங்கள் வாழ்க்கையை அர்பணித்துள்ள செவிலியர்களை நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்த நல்ல நேரத்தில் மனதார வாழ்த்துவோமே.
|