சிறுபான்மைச் சமுகத்தைச் சேர்ந்த பெண்களை தலைமைப் பண்புக்குத் தயார் படுத்துவது, பிற சமுகத்தைச் சார்ந்த பெண்களுக்கு கிடைப்பது போன்று சம அந்தஸ்த்து இஸ்லாமிய சமுகத்தைச் சேர்ந்த பெண்களுக்கும் கிடைக்க செய்வது தொடர்பாக 11 - வது திட்டக்கால அறிக்கையில் ஒரு வரைவுத் திட்டம் இடம் பெற்றுள்ளது.
இதற்குதிட்டக் குழுவின் முழு அமர்வும், மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில் நாளை பிரதமர் தலைமையில் டெல்லியில் நடைபெறவுள்ள தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
பிரதமர் தலைமையிலான இந்தக்கூட்டத்தில் முக்கியத் துறைகளின் காபினட் அமைச்சர்களும், பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களும் பங்கேற்கின்றனர். நாட்டில் 11 -வது திட்டக்காலத்தில் செயல்படுத்த உள்ள திட்டங்கள் தொடர்பாக மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள அறிக்கைக்கு ஒப்புதல் பெறவே தேசிய வளர்ச்சி குழு கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இத்திட்டக் காலத்தில் சமுகசேவைத் துறைக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள முஸ்லீம்களில் 59 விழுக்காடு முஸ்லீம் பெண்கள் பள்ளிகளுக்குச் சென்றதில்லை.கிட்டத்தட்ட 17 வயதுக்குள்ளேயே 60 விழுக்காடு இச்சமுகப் பெண்களுக்குத் திருமணம் நடைப்பெற்று விடுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கல்வியறிவைப் பொறுத்தமட்டில் தேசிய சராசரியை விட 5.7 விழுக்காடு குறைந்து 59.1 விழுக்காடு கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர். ஹரியானாவில் 5 -ல் ஒரு முஸ்லீம் பெண்ணும், பீகார், உத்திரப்பிரதேசத்தில் 3 -ல் ஒரு பங்கினரும், மேலும் 15 மாநிலங்களில் 50 விழுக்காட்டுக்கும் குறைவான கல்வியறிவு பெற்றவர்களாக முஸ்லீம் பெண்கள் உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
வேலை பங்கேற்ப்பு விகிதாச்சாரத்திலும் முஸ்லீம்கள் 31.3 விழுக்காடு அளவுக்குத்தான் உள்ளனர். மொத்தத்தில் 14 விழுக்காடு பெண்களே வேலைக்கு பதிவுச் செய்துள்ளனர். முஸ்லீம்களை உள்ளடக்கிய அனைத்து பிரிவினரிலும் தமிழகம், கேரள மாநிலங்கள் அதிகம் கல்வியறிவு பெற்றுள்ள நிலையிலும், வேலை பங்கேற்பில் இந்துக்களை விட குறைவாக 14 விழுக்காடு நிலையில் தான் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
முஸ்லீம் பெண்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரம், வாழ்க்கை நிலையை முஸ்லீம் சமுகத்து ஆண்களுக்கு நிகராக மட்டுமல்ல, மற்ற சமயங்களைச் சேர்ந்தவர்களுக்கு நிகராக அமைத்துக் கொடுப்பது 11 -வது திட்டக்காலத்திற்கு உண்மையிலேயே மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் பாலர் இல்லங்கள், உதவித் தொகைகள், தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், கழிவறை வளதியுடன் கூடிய பள்ளிகளை உருவாக்கியதே கூடுதலாக பெண் குழந்தைகள் பள்ளியில் சேரவும், பள்ளிப் படிப்பைத் தொடர வேண்டுப் என்பதற்காகத்தான். அப்படி உள்ள நிலையில், சமூக - பொருளாதார- பண்பாட்டு ரீதியாக சிறுபான்மைச் சமூகமாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண் குழந்தைகள் ஏன் கல்வியை பெற இயலவில்லை என்பது தொடர்பாக விரிவான வகையில் ஆய்வு நடத்தவும் உள்ளதாக 11 -வது திட்ட வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
|