பணியிடங்களில் ஆண்களை விட அதிகம் வேலை செய்வது போன்ற ஓர் உணர்வு பெண்களிடம் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்தில் வெவ்வேறு ஆண்டுகளில் 5 முறை பலதரப்பட்ட ஆண், பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பெண்கள், ஆண்களை விட அதிகம் வேலை செய்வதாக உணரும் நிலை தெரியவந்தது என்று வர்ஜினீயா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த எலிசபெத் கார்மன், வாஷிங்டன் ஸ்டேட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜீலி கேமெக் ஆகிய இரண்டு சமூகவியலார்கள் கூறியுள்ளனர். ஆணும், பெண்ணும் ஒரே கல்வித் தகுதி, திறன், வீட்டு வேலைகளில் சம அளவு பொறுப்புகள் உள்ள நிலையிலும், ஒரே பணியை மேற்கொள்ளும் இருபாலரில் பெண்கள் அதிகம் வேலை செய்வதாக உணருவது சரியானது தான் என்பது தாங்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்தது என்கிறார் கார்மன். வேலை செய்யும் போது ஆணுக்கும், பெண்ணுக்கும் உடல், மனரீதியான கட்டுப்பாடு மிகவும் இன்றியமையாதது. இந்த கட்டுப்பாட்டை பல காரணிகள் தகர்க்கும் நிலை உருவாகலாம், ஆனால் அதனையும் கடந்து பணியாற்றுவதில் ஆண்களை விட பெண்கள் அதிகம் உழைக்க வேண்டியிருப்பதற்கு காரணம் பணி நடைமுறையில் மேம்பாடான தரத்தை காட்ட வேண்டியிருப்பதால் என்று கூறுகிறார் கார்மன். அலுவலக பணி தவிர வீட்டு வேலைகள், குழந்தைகளை கவனிப்பது, திருமணம், குடும்பம் ஆகிய காரணிகளும் பெண்களின் வேலையை அதிகமாக்குகிறது. இதுதான் தாங்கள் ஆண்களை விட அதிகமாக வேலை செய்வது போன்ற உணர்வை அவர்களுக்குள் உருவாக்குகிறது. பெண்கள் மேற்கொள்ளும் எந்த சிறப்பான செயலையும் இந்த சமூகம் அங்கீகரிப்பதில்லை. ஒரு செயலை ஆண், பெண் ஆகிய இருவரும் இணைந்து மேற்பொள்ளும் நிலையிலும் அதனை செய்து முடிப்பதில் அதிக பங்களிப்பு ஆண் தான் கொடுத்திருப்பான் என்று எல்லோரும் கருதுகின்றனர். ஒரு பணியை எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி ஒரு பெண் வெற்றிகரமாக செய்தால், அப்போதும் இந்த உலகம் அவளை பாராட்டாமல், பெண்ணை யோகம் நிறைந்தவள் என்று தான் கூறுகிறதே தவிர பாராட்ட முன்வருவதில்லை. எனவே தான் பெண்கள் தங்களது மேல் அதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக அதிகம் வேலை செய்ய வேண்டியுள்ளதாக கூறுகின்றனர் என்று கார்மன் கூறியுள்ளார். அதே நேரத்தில் இந்த ஆய்வு முடிவை அடிப்படையாகக் கொண்டு பெண்களிடம் மேலும் வேலை வாங்க முயற்சிக்க வேண்டாம் என்றும் அந்த இரு சமூகவியல் அறிஞர்களும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
|