கர்ப்பிணி பெண்கள் ஆரம்ப சுகாதார நிலையம் செல்ல போன் செய்தால் போதும் ஆம்புலன்ஸ் வந்து அழைத்து செல்லும் என்று தாளவாடியில் பழங்குடியினருக்கான சிறப்பு மனுநீதிநாள் முகாமில் மாவட்ட ஆட்சியர் உதயச்சந்திரன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் உதயசந்திரன் பேசுகையில், தாளவாடியில் உள்ள 63 பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளன. ஆசிரியர் இடமாற்றம் மூலம் 12 இடங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. மேலும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தேவையான ஆசிரியர் விரைவில் பணியிடம் மாற்றம் செய்யப்படுவர்.
நெடுஞ்சாலை, ஊரகவளர்ச்சி துறை மூலம் சாலைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. வனப்பகுதியில் வாழும் மக்களுக்கு பட்டா இல்லாததால், தொகுப்பு வீடு கட்டுவதில் சிக்கல் உள்ளது. அரசிடம் பேச்சு நடத்தி, பட்டா இல்லாமல் தேவையான தொகுப்பு வீடு கட்டித் தர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தாளவாடி, பைனாபுரம், கேர்மாளம் ஆகிய மூன்று இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. மாதம் ஆயிரம் வீதம் கர்ப்பிணிகளுக்கான உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது.
தற்போது சற்று மாற்றம் செய்யப்பட்டு, ஏழாவது மாதத்தில் ரூ. மூவாயிரமும், குழந்தை பிறந்து மூன்று மாதம் கழித்து ரூ. மூவாயிரமும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், கர்ப்பிணி பெண்கள் ஆரம்ப சுகாதார மையங்களுக்கு வரும் பயணச் செலவும் வழங்கப்படும். போன் மூலம் தொடர்பு கொண்டு அழைத்தால், ஆம்புலன்ஸ் வந்து கர்ப்பிணி பெண்களை அழைத்து செல்லும். இல்லையெனில், கர்ப்பிணிகள் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வர செலவழித்த பணம் திருப்பி வழங்கப்படும்.
கர்ப்பிணிகளுக்கு உணவு வழங்கவும் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். பழங்குடியினர், மலைவாழ் மக்களின் பொருளாதாரம் மேம்பட கடன் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதற்கான நிதியுதவி பெற அமைச்சர்கள், தன்னார்வலர் உதவி நாடப்படும். தோட்டக்கலை மற்றும் வேளாண் துறை திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
இயற்கை வேளாண் பொருட்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், சந்தைப்படுத்துதலுக்கும் அறிவுறுத்தப்படும். இங்கு ஏற்கனவே சேமிப்பு கிடங்குகள் உள்ளன. நடப்பாண்டில் கூடுதலாக ஐந்து தானிய சேமிப்பு கிடங்குகள் கட்டப்படும்.
யானைகள் தொல்லையால் பயிர்கள் நாசமடைகின்றன. யானையை ஊருக்குள் வராத வண்ணம் ஊரைச் சுற்றி 30 கி.மீ., சுற்றளவுக்கு யானை குழிகள் (பள்ளம்) அமைக்க வேண்டும் என சத்தி வன அலுவலர் கேட்டுள்ளார். ஊரக வளர்ச்சி துறை மூலம் அதற்குரிய நிதி வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
|