முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  இன்றைய மங்கை  கட்டுரைகள்
 
பெண்களுக்கான புதிய சட்டம் உதவுமா?
Webdunia
அண்மையில் அமுலுக்கு வந்திருக்கும் புதிய சட்டம் அனைவரும் அறிந்த ஒன்று தான். "பெண்களைத் துன்புறுத்தினால் ஒரு வருட சிறை தண்டனையும் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்" என்று கூறும் இந்த சட்டம் பெண்களுக்கு மிகவும் பயன்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

சமூக ரீதியாகப் பின் தங்கி உள்ள வட மற்றும் தென் மாநிலங்களின் கிராமப் பகுதிகளில் வசிக்கும் பெண்களின் நிலையை கவனித்தால் இந்த சட்டத்தின் அவசியம் நமக்கு நன்கு புலப்படும்.

ஒரு பக்கம் பெண்களை தெய்வ நிலைக்கு உயர்த்திப் பேசினாலும் மறு பக்கம் பெண் படும் அவஸ்தை எழுத்தில் அடங்காதது. ஒவ்வொரு 53 நிமிடத்திற்கும் ஒரு பெண் வன்புணர்ச்சிக்கு வீழ்த்தப்படுகிறாள்; ஒவ்வொரு ஏழு நிமிடத்திலும் வேலை செய்யும் இடங்களில் அல்லது பொது இடங்களில் பெண் மீது வன்முறை கையாளப்படுகிறது.

நாளொன்றுக்குக் குடும்ப வன்முறையால் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை 56. குடும்ப சித்திரவதை மற்றும் குடும்ப நபர்களால் பாலியல் கொடுமைக்கு ஆளாகும் பெண்களின் எண்ணிக்கை 112. இவையெல்லாம் உள்துறை அமைச்சகத்தால் பதிவு செய்யப்பட்ட விவரங்கள். பதிவுகளில் சிக்காமல் போனவைகள் அதிகம். அவைகளின் சோகக் கதை சொல்லி மாளாது.

1983 வரைக்கும் குடும்ப வன்முறைகளுக்கென்று சட்டப்பிரிவு இல்லை. பொதுப் பிரிவுகளின் மூலமாகத் தான் ஒரு பெண் தனது கணவனையோ குடும்ப நபர்களையோ சிறைக்குத் தள்ள இயலும். 1990ல் திருத்தி அமைக்கப்பட்ட குடும்ப வன்முறை சட்டம் ஓரளவுக்கு பெண்களுக்கு நிம்மதியையும் நம்பிக்கையையும் தந்தது. ஆனால் அந்த சட்டத்தின் உதவியை நாடிய பெண்களுக்கு அப்படி ஒன்றும் நியாயமான நீதி கிடைக்கக் காணோம்.

பல அபலை பெண்களுக்கு இதன் மூலம் சரியான தீர்ப்பு கிடைக்கவில்லை. காரணம் சில கிராமத்து நீதிமன்றங்களின் அலட்சியப் போக்கும் அவர்கள் பார்வையில் நீதி எனப்பட்டதையே தீர்ப்பாய் வழங்கியதும் தான்.

தங்களது பிரச்சினைகளை வெளியே சொல்ல முடியாமல் பல பெண்கள் இன்னமும் பெரும்பான்மையான கிராமங்களில் இருக்கின்றனர். அப்படியே துணிந்து குரல் எழுப்பும் பெண்களுக்கு சட்டமோ நீதிமன்றமோ பாதுகாப்பு தருவதில்லை என்பதை சில தீர்ப்புகள் நிரூபிக்கின்றன. இந்த நிலையில் கடுமையான சட்டம் இயற்றி விட்டால் மட்டும் அதன் மூலம் சமூக நீதியும் பாலின சமத்துவமும் வரக்கூடுமா எனில் அது சந்தேகம் தான்.

சட்டத்தின் மீது சந்தேகம் இல்லை எனினும் அதை அமல் செய்கிறவர்கள் அதனை தவறாகப் பயன்படுத்துவதால் பிரச்சினை தீரும் நம்பிக்கையை பெண்கள் இழக்க வேண்டி உள்ளது. குடும்பம் எனும் அமைப்பின் சிக்கல்களைக் கூடத் தாண்டி வெளியே வர இயலாமல் திண்டாடும் பல லட்சம் பெண்கள் இது போன்ற சட்டங்களின் மூலம் தீர்வு பெறலாம்.

அதற்கு சட்டத்தை காவல் துறையும் நீதித் துறையும் சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதன் மூலமாகத் தான் சட்டம் எனும் நம்பிக்கைத் துளிர் நெடுமரமாய் உயர்ந்து வளர முடியும்
மேலும்
மனம் வேண்டும் மரம் வைக்க
…ஈவ் டீஸிங்
புகழ்பெற்ற தோழிகள்
கல்லூரிகளில், பள்ளிகளில் நடக்கும் கொடுமை
“அய்யோ! தாங்க முடியலே....”
சிறந்த பிரம்மச்சாரியை அறிய உதவும் வழிகாட்டி