புதியதாகத் தொடங்கும் எந்தவொரு செயலும் வெற்றிகரமாக நிறைவேறுவதற்கு, மூல முதற் கடவுளான விநாயகரை வழிபடுவது நமது மக்களிடையே தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாகும்.
நம்பியோரை கைவிடாத அந்தத் தும்பிக்கையானுக்கு உகந்த நாள் விநாயகர் சதுர்த்தி. ஆண்டு தோரும் ஆவணி மாதம் சுக்லபக்ஷ சதுர்த்தி திதியை (தினத்தை) விநாயகர் சதுர்த்தியாக வழிபடுகிறோம்.
பிள்ளையார் சுழி போடுவது ஏன்?
கணபதியை துதித்து ஒரு செயலத் தொடங்கினால் தொட்டது துலங்கும் என்பது ஐதீகம். இதையொட்டியே பிள்ளையார் சுழி போட்டு எழுதும் பழக்கம் நம்மிடம் உருவானது.
உலகில் முதன்முதலாக எழுத ஆரம்பித்தவரே விநாயகப் பெருமான்தான். வேத வியாசர் மகாபாரதத்தை சொல்லச்சொல்ல தன் தந்தத்தை உடைத்து எழுத்தாணியாக்கி எழுதியவர் பிள்ளையார். அதற்காகவே நாமும் பிள்ளையார் சுழி போட்டு எழுதத் தொடங்குகிறோம்.
எலி வாகனத்தின் தத்துவம்
கனத்த உருவம் கொண்ட பிள்ளையார் சிறிய உருவம் உடைய மூஞ்சுறுவை, அதாவது எலியை வாகனமாகக் கொண்டிருப்பது முரண்பாடாகவும் வினோதமாகவும் இருக்கலாம். ஆனால் இதில் ஒரு தத்துவம் அடங்கியுள்ளது.
யானை முகமும், பெருத்த உடலும் கொண்ட விநாயகருக்கு சின்னஞ்சிரு மூஞ்சூறு வாகனமாக இருப்பது போல், நம் கண்ணுக்கு புலப்படாத மூச்சுக் காற்றானது 'வினை' எனப்படும் நம் உடலைத் தூக்கிச் செல்கிறது.
மேலும், சிறியதாக உள்ள எதையும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்ற பாடத்தை நமக்கு உணர்த்தவே எலியை வாகனமாகக் கொண்டிருக்கிறார் கணபதி.
கணபதியை வணங்குவது எப்படி?
பிள்ளையார் முன் நின்று அவரைத் துதித்து, தலையில் குட்டிக் கொண்டு பக்தர்கள் வழிபடுவதை நாம் பார்த்திருக்கிறோம். முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடது பக்கத்திலும், இடது கையால் வலது பக்கத்திலும் 3 முறை குட்டி, காதுகளைப் பிடித்தபடி தோப்புக் கரணம் போட்டு விநாயகரை வணங்க வேண்டும்.
தோப்புக் கரணம் போடுவதற்கு ஒரு காரணமும் உண்டு. மகா விஷ்ணுவின் ஸ்ரீ சக்கரத்தை பிடுங்கிக் கொண்டு அதை வாயில் போட்டுக் கொண்டாராம் விநாயகர். பலம் பொருந்திய விநாயகரிடம் இருந்த சக்கரத்தை மீட்க என்னன்னவோ முயன்றும் திருமாலாலுக்கு வெற்றி கிட்டவில்லை.
|