இந்திய மண்ணில் இருந்து வெள்ளையர்கள் வெளியேற்றப்பட்டு 61 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் அந்த வெள்ளையர்களை இந்திய மண்ணில் இருந்து விரட்டிய தியாக உள்ளங்களை நாம் நினைத்து பார்க்கிறோமா? அப்படியே பார்த்தாலும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி மட்டும் அவர்களை நினைவு கூருகிறோம். அந்த வகையில் சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவை நினைவு கூருவோம்....
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் - அந்நிய ஆதிக்கத்துக்கு எதிராக வெளிக் கிளம்பிய போராட்ட வேகத்தைத் தன்னளவில் கொண்டதாக இருந்தது. எங்கும் போராட்ட எழுச்சி, சுதந்திர தாகம் வேரூன்றத் தொடங்கியது.
தமிழகமும் அந்த தேசியப் போராட்ட வேகத்தில் பயணித்தது. பல்வேறு போராட்ட வீரர்களை உருவாக்கியது. வெகுஜன மக்களிடையே தேசிய உணர்வு பீறிட்டெழப் பலர் முயற்சி செய்தனர். தமது சிந்தனையாலும் விடாமுயற்சியாலும் மக்களிடையே எப்போதும் சுதந்திரக் கனல் கனன்று கொண்டிருக்க வைத்தனர். அந்த வகையில் வ.உ.சிதம்பரம்பிள்ளை, சுப்பிரமணிய சிவா, மகாகவி பாரதி போன்றவர்கள் தமிழகத்தை வழிநடத்திய முன்னனித் தலைவர்களாவர்.
அவர்களில் சுப்பிரமணிய சிவா, தன்னை ஒரு சுதந்திரப் போராட்ட வீரராக, தீவிர சுதேசக் கிளர்ச்சியாளராக, பத்திரிகை ஆசிரியராக, புரட்சியாளராக, சன்னியாசியாக, சமூக சீர்திருத்தவாதியாக என்று பல தளங்களில் வெளிப்படுத்திக் கொண்டவர். ஆங்கிலேய அதிகாரத்துக்கு எதிராகப் போராடுவதற்கான உகந்த சூழல் உருவானபோது, அதனுள் சிவா தன்னை இணைத்துக் கொண்டது காலத்தின் கட்டாயம்.
இந்நிலையில் ஆரிய சமாஜத்தைச் சேர்ந்த சந்திரவர்மா நாடெங்கும் சுயராஜ்யப் பிரச்சாரம் செய்து கொண்டு திருவனந்தபுரம் வந்தார். பல கூட்டங்களில் நாட்டு நிலைமையைப் பற்றி விவரித்துப் பேசினார். இந்தக் கூட்டங்களுக்கு தவறாது சென்று வந்த சுப்பிரமணிய சிவா உள்ளத்தில் நாட்டுப்பற்று கொழுந்து விட்டெரிய ஆரம்பித்தது. நாட்டின் விடுதலைக்காக அனைத்தையும் அர்ப்பணம் செய்வதாக உறுதி எடுத்துக் கொண்டார்.
'தர்ம பரிபாலன சமாஜம்' என்ற பெயரால் ஒரு சங்கத்தை ஆரம்பித்தார். இதன் கூட்டங்கள் தனது வீட்டிலேயே நடைபெற ஏற்பாடு செய்தார். தேசிய உணர்வை வளர்த்தெடுக்கும் வகையில் பத்திரிகைகள் வரவழைத்து இளம் தலைமுறையினர் படிக்க வழிசெய்தார். தனது சமாஜ வேலைகளைத் தவிர, தாமே வெளியிடங்களில் பொதுக்கூட்டங்கள் கூட்டிப் பேசினார். நாட்டின் அவல நிலைமையை மக்களுக்கு எடுத்துக் கூறி பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு எதிராக மக்களைத் தட்டியெழுப்பினார்.
ஊர்தோறும் பிரச்சாரம் மேற்கொண்டு வந்த சுப்பிரமணிய சிவா, திருநெல்வேலியில் சில காலம் தங்கினார். அங்கே வ.உ.சி.க்கு நல்ல செல்வாக்கு இருந்தது. சுப்பிரமணிய சிவா நடத்திய போராட்டங்களும் பொதுக்கூட்டங்களும் கண்டு வ.உ.சி. அவரை மனதாரப் பாராட்டினார். இதனால் இருவருக்குமிடையே நட்பும் வளர்ந்தது. இருவரும் இணை பிரியா போராட்ட வீரர்களாக வலம் வந்து கொண்டிருந்தனர்.
|