நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2008-09 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கான கடன் இரத்து செய்யப்பட்டுள்ளதை வரவேற்கும் அதே நேரத்தில், இந்த நிதிநிலை அறிக்கை விவசாயிகளின் வேளாண் கடன்களுக்கான வட்டி குறைப்பு, நீண்ட கால அடிப்படையில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் எந்த வித நடவடிக்கையும் இடம் பெறவில்லை என்றும், தேசிய கடன் தீர்வு ஆணையம் அமைக்கப்படவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
வருவாய் திரட்டுவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக இந்த நிதிநிலை அறிக்கையில் எந்தவித தகவலும் இடம்பெறவில்லையென்றும், மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முக்கிய கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
மேலும் விவசாயிகளின் நீண்டகால பிரச்சனைகளுக்கு எந்த தீர்வும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். கடன் தள்ளுபடி தற்போது விவசாயிகள் எதிர்கொள்ளும் சிக்கலுக்கு மட்டும்தான் தீர்வைத் தந்துள்ளதாகவும், மற்றபடி ஒட்டு மொத்தத்தில் விவசாயிகள் எதிர்க் கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணத் தவறிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் விரிவுப் படுத்தப்படும் நிலையில் இத்திட்டத்திற்காக ஒதுக்கப் பட்டுள்ள நிதி குறைவாக உள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிதிநிலை அறிக்கையில் வணிகவரி தொடர்பாக எதுவுமே குறிப்பிடப்படாத நிலையில், திட்டங்களை நிறைவேற்ற தேவையான வருவாயை எவ்வாறு திரட்டப் போகின்றார் என்பது குறித்தும் நிதியமைச்சர் எதுவுமே தெரிவிக்காததையும் டி.ராஜா குறைகூறியுள்ளார்.
|