2007 ஆம் ஆண்டின் வீழ்ச்சிகளுக்குப் பிறகு, அனில் கும்ளே தலைமையிலும் எம்.எஸ்.தோனி தலைமையிலும், இந்திய அணி மிகப்பெரிய அளவிலான எழுச்சிகளைக் கண்டது. அந்த எழுச்சிகளில் முக்கிய பங்கு வகித்த அனில் கும்ளேயும், இந்திய கிரிக்கெட்டின் மனப்போக்கை மாற்றிய தாதா கங்கூலியும் ஓய்வு பெற்றது இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட்டின் முக்கிய நிகழ்வுகளாக கருதலாம்.இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மென் சச்சின் டெண்டுல்கர் ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக பிரையன் லாராவின் உலக சாதனையை முறியடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்து சாதனை புரிந்ததும் இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வாகும்.2008 ஆம் ஆண்டின் துவக்கத்தில் இந்திய கிரிக்கெட் அனில் கும்ளே தலைமையில் சோதனைகளை சந்திப்பதில் துவங்கியது. மெல்போர்ன் டெஸ்டில் இந்தியா தோல்வி அடைய, புதிய ஆண்டான 2008 ஜனவரியில் சிட்னியில் அடுத்த டெஸ்ட் துவங்கியது. 121 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறிய ஆஸ்ட்ரேலியா நடுவர்களின் மோசடியான தீர்ப்புகளினால் சைமன்ட்சின் சதம் மூலம் 463 ரன்களை எட்டியது. நடுவர் மோசடி அன்றே துவங்கியது. இந்தியா பேட்டிங்க் செய்ய களமிறங்கிய போது திராவிட் துவக்கத்தில் களமிறங்கி 53 ரன்களை எடுத்தார். ஆனால் அன்றைய தினத்தின் சிறப்பான, மகத்தான ஆட்டத்தை வெளிப்படுத்தி தூங்கிக் கொண்டிருந்த இந்திய அணியின்ரை உசுப்பி விட்டவர் லக்ஷ்மண். இவர் 142 பந்துகளில் 109 ரன்களை 18 பவுண்டரிகளுடன் விளாசினார்.3 ஆம் நாள் சச்சின் டெண்டுல்கர் இந்த ஆண்டின் துவக்கத்தில் மிகச்சிறந்த இன்னிங்சை ஆடி 154 ரன்களை எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமலே இருந்தார். ஆனால் அன்றைய தினம் சூடு பிடித்தது ஹர்பஜன் மீதான நிறவெறிக் குற்றச்சாட்டு. ஹர்பஜன், பிரட் லீயை தொட்டு எதோ கூறப்போக, சைமன்ட்ஸ் உடனடியாக மூக்கை நுழைத்து "உனக்கு ஆஸ்ட்ரேலிய அணியில் நண்பர்கள் இல்லை" என்று கூற, பதிலுக்கு ஹர்பஜன் "குரங்கு" என்று திட்டியதாக திரிக்கப்பட்டது. இந்த சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கும்போதே கடைசி நாள் ஆட்டத்தில் ஆஸ்ட்ரேலிய அணிக்கு சாதகமாக மேற்கிந்திய நடுவர் ஸ்டீவ் பக்னர் சில தீர்ப்புகளை வழங்கி இந்திய அணியின் தோல்விக்கு பெரிய காரணமானார். கடைசி ஓவரில் கிளார்க் 3 விக்கெட்டுகளை ‘வீழ்த்த’ மோசடி வெற்றியை ஆஸ்ட்ரேலியா பெற்றது. குறைந்தது 20 மோசடி தீர்ப்புகளையாவது அந்த போட்டியில் நடுவர்கள் செய்தனர். அனைத்தும் இந்திய அணிக்கு எதிராக திரும்பியது. அனைத்தையும் விடக்கொடுமை இது போன்ற ஒரு வெற்றியை பெற்று விட்டு ஆஸ்ட்ரேலிய வீரர்கள் போட்ட குதியாட்டம் காண சகிக்க முடியாத ஒன்று. அதன் பிறகு ஆஸ்ட்ரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கிற்கு பல்வேறு பத்திரிக்கைகள், ஊடகங்களிலிருது கடுமையாக எதிர்ப்புகள் வர ஆஸ்ட்ரேலிய வீழ்ச்சியின் துவக்கமாக இது மாற, இந்திய அணியின் எழுச்சியுமாகவும் அமைந்தது. |