குடியரசு தினம்... இந்நாளை கொண்டாடும் வேளையில், நம்மில் எத்தனை பேர் உண்மையான குடிமக்களாக இருக்கிறோம் என்பதை ஒருகணம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
நாட்டில் சுமார் 60 முதல் 70 சதவிகிதம் வரையிலான மக்களே உண்மையான குடிமக்களாக இருக்கின்றனர் என்பதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். காரணம், இந்த எண்ணிக்கையிலானோர் மட்டுமே தங்களது வாக்குகளைத் தேர்தல்களில் பதிவு செய்கின்றனர். ஏனையோர் அந்த நாளை விடுமுறையாகக் கருதி உல்லாசமாக கழிப்பதிலேயே நாட்டம் காட்டுகின்றனர்.
தேர்தல்களை எவரெல்லாம் உதாசீனப்படுத்துகிறார்கள் என்று பார்ப்போமானால், கல்வியறிவு கிடைக்கப் பெறாத, வறுமைக்கோட்டுக்கும் கீழேயுள்ள ஏழைகள் அல்ல; மாறாக, கற்றறிந்த சான்றோர் என்று பேச்சளவில் சொல்லிக்கொள்ளும் பணக்கார வர்க்கத்தில் 'பெரும்பாலானோரே' என்பது தெளிவு.
குறிப்பாக, கிராமப் பகுதிகளைக் காட்டிலும், நகர் பகுதிகளிலேயே அதிக அளவிலான கடமையுணர்வில்லாதோர் இருக்கின்றனர்.
உதாரணத்துக்கு கடந்த 2006-ல் தமிழகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலை எடுத்துக்கொள்வோம். இதில், சென்னை - துறைமுகம் தொகுதியில் மொத்தம் 60,011 பேர் மட்டுமே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். ஆனால், இந்தத் தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையோ 1,05,115! வாக்களிக்காதோர் எண்ணிக்கை 45,104!
சரி... இதே தேர்தலில் கிராமங்கள் நிறைந்த வேதாரண்யம் தொகுதியைப் பார்ப்போம். இதன் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1,59,520. வாக்களித்தோரின் எண்ணிக்கை 82.91 விழுக்காடு; அதாவது, 1,32,251 பேர்!
இந்த ஒப்பீட்டில் இருந்தே தெரிந்துவிடும் யாரெல்லாம் பொறுப்புணர்வு மிக்க குடிமக்களாக இருக்கிறார்கள் என்பது!
சட்டப்பேரவைத் தேர்தலாக இருந்தாலும் சரி, மக்களவைத் தேர்தலாக இருந்தாலும் சரி, உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும் சரி... பொறுப்புணர்வுடன் தங்களது வாக்குகளைப் பதிவு செய்பவர்களில் பெரும்பான்மையானோர், நடுத்தர மற்றும் வறுமைக் கோட்டுக்கும் கீழேயுள்ள குடிமக்களே என்பதை மறுக்க இயலாது.
|