தை மாதம் என்பது சக்தி வாய்ந்தது. இதனை மகர மாதம் என்றும் அழைப்பார்கள். மகரத்திற்குள் சூரியன் நுழைவதே மகர மாதம். ஜோதிடத்தில் பார்க்கும் போது,, பூமியை இரண்டாகப் பிரிப்பது போல் ஆகாயத்தை இரண்டாக பிரிப்பார்கள். அதை சூரியன் பகுதி, சந்திரன் பகுதி என்றும் கூறுவதுண்டு.
அதில் மகரத்தில் இருந்து கடகம் வரை சந்திரனுடைய பகுதிக்குள் வரும், அவைகள் சந்திராதிக்கத்திற்குரியன. இந்த மாதத்தில் இருந்து சூரியன் பகுதி துவங்குகிறது. இந்த மாதத்தில் சூரியப் பகுதி வலிமையடைகிறது.
அதாவது உத்திரயாணப் புண்ணிய காலம் துவங்குகிறது. அதாவது காலத்தை இரண்டு அயனமாகப் பிரிக்க வேண்டும். தக்ஷாயணம் (தெற்கு), உத்திராயணம் (வடக்கு) என்பவை.
அதனால்தான் இந்த காலம் எல்லா வகையிலும் சிறப்புடையது. உத்திராடம் சிறந்த நட்சததிரம். உத்திராடத்தில் பிள்ளையும், ஊர் எல்லையில் கொல்லையும் (வயலும்) என்பது பழமொழி.
அதாவது உத்திராடத்தில் பிள்ளை பிறந்தால் உடனடியாக அவர்களுக்கு அருகிலேயே நிலம், வீடு அல்லது விளை நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். எனவே உத்திராடத்தின் ராசியான மகரத்தில் சூரியன் நுழைவது வெகுச் சிறப்பான ஒன்றாகும்.
அந்த நேரத்தில்தான் பல விண்மீன்கள் சூரியனையும், சந்திரனையும் சூழ்ந்திருக்கும். மலையாளத்தில், சேர நாட்டில் எடுத்துக் கொண்டால் இதனை மகர ஜோதி என்று அழைக்கின்றனர். ஆனால் விளக்கை ஏற்றி ஜோதி என்று காண்பிப்பது ஒரு அடையாளமே, ஆனால் இயற்கையாக இருப்பதை அறிவிப்பதற்காகவே அவ்வாறு செய்கின்றனர்.
மகரம் ஆன்மீக மாதம்!
அதனால் தான் பல சிறப்புகள் வாய்ந்த மகர மாதத்தை ஆன்மீகத்தை போற்றும் மாநிலமான கேரளாவில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தை ஒன்றாம் தேதியன்று மாலை அந்த விண் மீன் தெரியும். அன்றைய தினம் கருடன் வட்டமிடும். அதுவும் மகர மாதம் துவங்குவதை குறிக்கும் மற்றொரு அறிகுறி. அந்த விண் மீனின் பெயர் மகர மீன்.
மகர யாழ் என்று ஒரு இசைக்கருவி உண்டு. மகர யாழ் மிக வலிமையானது. அதை மீட்டுவதற்கே மிகுந்த வலிமையும், ஞானமும் வேண்டும். எல்லோராலும் மீட்ட இயலாது. அதுபோன்று மகர மீன், அதுபோல் மகர ராசியில் பிறந்தவர்களை மகரத்தார் நகராழ்வார் என்பர். அவர்களுக்கு ஆளும் குணம் உண்டு. மகர ராசியில் இடம்பெற்றுள்ள ராசிகள் மூன்று, மூன்றுமே சக்தி வாய்ந்த நட்சத்திரங்கள். உத்திராடம், திருவோணம், அவிட்டம். திருவோணம் வெங்கடாச்சலபதியின் நட்சத்திரம். திரு ஓணத்தில் பிறந்தவன் கோணத்தை ஆள்வான். அதாவது திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உலகத்தின் எதாவது ஒரு மூலையையாவது ஆள்வார்கள் என்பதாகும்.
அவிட்ட நட்சத்திரத்திற்கு “தவிட்டுப் பானையும் தங்கமாகும்” என்ற பழமொழி உண்டு. மூன்று நட்சத்திரங்களுமே மிகச் சிறந்த நட்சத்திரங்கள் ஆகும்.
மகரம் அத்தனை சிறப்பு வாய்ந்தது. மகரமே சிறந்த வீடு. அதனில் நெருப்பு நட்சத்திரமும் உண்டு, நீர் நட்சத்திரம் உண்டு. உத்திராடமும், அவிட்டமும் நெருப்பு நட்சத்திரங்கள். திருவோணம் நீர் நட்சத்திரம். மகரத்தைப் பற்றி பழைய நூல்கள் கடல் வீடு என்கின்றன. மகரம் ஆழியாகும். ஆனால் ஒரு சில நூல்கள் நெருப்புத் தன்மை வாய்ந்த கடல் வீடு என்றும் கூறுகிறது. அதாவது வெந்நீர் ஊற்றுகள் அதிகம் நிறைந்தது என்று நாம் கொள்கிறோம். கடல் என்றாலே நீர்தான். ஆனால் குளிர்ச்சி அல்ல கொதிப்புதான் அதன் தன்மை. அதாவது இயல்பு நிலையில் இருந்து வேறுபட்டுக் காணப்படுவது இந்த ராசிக்கு பொருந்தும்.
மகர ராசியில் பிறந்தவர்கள் தாய் தந்தையை விட்டு மாறுபட்டு இருப்பார்கள். தாங்கள சார்ந்த நாடு, மதம் ஆகியவற்றிலிருந்து வேறுபட்டுக் காணப்படுவர். ஒரே நிறுவனத்தில் வேலை செய்தாலும் வேறு மாதிரி செய்து பார்ப்பவர்கள். அதுதான் மகரத்தின் குணம்.
|